கேப் டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. அந்தப் போட்டியின் கடைசி ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்தை சிக்ஸ் செல்லும் முன் சூர்யகுமார் யாதவ் அபாரமாக செயல்பட்டு கேட்ச் பிடித்திருப்பார். அந்த தருணம் தான் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. அது குறித்து நகைச்சுவை சொல்கிறேன் என்ற பெயரில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் தென்னாப்பிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சி.
அந்த கேட்ச் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்தன. அந்த கேட்ச்சை பிடித்த போது சூர்யகுமார் யாதவ் பவுண்டரி எல்லையை தாண்டிவிட்டார், பந்தை பிடித்த போது பவுண்டரி எல்லையில் அவரது கால் உரசியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அவர் அந்த கேட்சை சரியாக தான் பிடித்தார் என உறுதியாக சொல்லும் அளவிற்கு வீடியோ ஆதாரங்கள் வெளிவந்தன.

அந்த சர்ச்சை அத்துடன் முடிவுக்கும் வந்தது. எந்த ஒரு தென்னாப்பிரிக்க வீரரும் அது குறித்து சந்தேகம் எழுப்பவில்லை. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவரான தப்ரைஸ் ஷம்சி இணையத்தில் சொன்ன ஒரு நகைச்சுவை இந்திய ரசிகர்களை சீண்டும் வகையில் இருந்தது.
உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நடந்த வேடிக்கையான கேட்ச் சம்பவம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு இருந்தது, அந்த வீடியோவை பார்த்த தப்ரைஸ் ஷம்சி இதே போல சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச்சின் போதும் நாம் செய்திருந்தால் அது நாட் அவுட் ஆக இருந்திருக்கும் என்று கூறி இருந்தார். அந்த உள்ளூர் போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் பந்தை தூக்கி அடிக்கிறார். ஃபீல்டர் பவுண்டரி எல்லைக் கோட்டுக்கு அருகே பந்தை கேட்ச் பிடிக்கிறார்.
அப்போது தான் எல்லை கோட்டுக்கு முன்பே பந்தை கேட்ச் பிடித்து விட்டோமா? என்பதை உறுதி செய்ய அந்த ஃபீல்டர் நின்ற இடத்தை விட்டு அசையாமல் அப்படியே ஒற்றைக் காலுடன் நின்று கொண்டே அருகில் இருந்தவர்களை வந்து பவுண்டரி எல்லைக் கோட்டை பார்க்குமாறு சொன்னார். அப்போது எதிரணியை சேர்ந்தவர்கள் கயிறை எடுத்துக் கொண்டு சென்று பவுண்டரி கோடு எங்கே இருந்தது என அளக்கத் தொடங்கினர்.
பின்னர், அவர்கள் தங்களுக்குள் வாக்குவாதம் செய்தனர். அந்த வீடியோவில் நடப்பது போலவே, சூர்யகுமார் யாதவ் தான் கேட்ச் பிடித்த பின் அசையாமல் அப்படியே நின்று விட்டு அம்பயரை சரி பார்க்க சொல்லி இருந்தால் அது நாட் அவுட் ஆகி இருக்கும் என்ற அர்த்தத்தில் தப்ரைஸ் ஷம்சி கூறி இருந்தார்.
அவர் 2024 டி20 உலகக்கோப்பை தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இதுபோல இந்தியா அணி மீது அவதூறு பரப்புவதாக இந்திய ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர். இதை அடுத்து விளக்கம் அளித்துள்ள ஷம்சி, "நான் சொன்னது ஒரு நகைச்சுவை தான் அதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு நான்கு வயது குழந்தைக்கு சொல்வது போல சொல்கிறேன். நான் சொன்னது ஒரு நகைச்சுவை." என அவர் மற்றொரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.