கிங்ஸ்டவுன்: கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையின் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இது போன்ற ஒரு சம்பவத்தை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை என ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கண்ணீர் மல்க இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய தெருக்களில் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடிய அந்த நாட்டு ரசிகர்கள் ஆப்கன் வெற்றியை உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கொண்டாடி வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் படிப்படியாக முன்னேறி வந்த ஆப்கானிஸ்தான் அணி 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்துள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி இருந்தது. அந்த சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மட்டுமே தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அந்த சுற்றிலும் இந்திய அணியிடம் மட்டுமே தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான், வலுவான அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
அடுத்து வங்கதேச அணியை வீழ்த்தினால் அரை இறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் அந்தப் போட்டியில் மோசமான பிட்ச்சில் ஆப்கானிஸ்தான் அணி நிதானமாக விளையாடி 115 ரன்கள் சேர்த்தது. அடுத்து பிட்ச்சை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வங்கதேச அணியின் விக்கெட்களை வரிசையாக வீழ்த்தினர்.
வங்கதேச அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த வெற்றியால் உணர்ச்சி வசப்பட்ட ஆப்கானிஸ்தான் அணியின் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள். இதுவரை விளையாட்டுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இத்தனை பெரிய வெற்றியை பெற்றதே இல்லை.
கடந்த 20 ஆண்டுகளாக போர் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்கள் பல வேதனைகளை சந்தித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக அவர்களுக்கு கிரிக்கெட் மட்டுமே ஒரே ஆறுதலாக இருந்து வந்தது. இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேறி இருப்பது அந்த நாட்டு மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.