கிங்ஸ்டவுன்: காலையிலேயே இன்ப செய்தி இந்திய ரசிகர்களின் செவிகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆம்.. கடந்த வருடம் 50 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று நமது வயிற்றெரிச்சலை கொட்டிய ஆஸ்திரிலேய அணி, டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேற்றியுள்ளது.
அதேநேரம், உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில், ஆஸ்திரேலிய அணியை அரையில் சுற்றுக்கு முன்னேற விடாமல் செய்ததோடு ஐசிசி கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக் கோப்பை அரை இறுதிக்கு ஆப்கானிஸ்தானின் முன்னேறி சாதித்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி சூப்பர் 8 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த சாதனையை செய்துள்ளது ஆப்கானிஸ்தான். முன்னதாக சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை நேற்று வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது. ஆப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலியா ஏற்கனவே தோற்றிருந்ததால் வங்கதேசத்துடனான போட்டியில் ஆப்கன் வென்றால் ஆஸி. வெளியேறும் என்பதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதே அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று காலை நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி மிகவும் நிதானமாக ஆடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அணியின் துவக்க வீரர் ரஹ்மானுல்லா 55 பந்துகளில் 43 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அடுத்து வங்கதேச அணி பேட்டிங் ஆடியது.
12.1 ஓவரில் 116 ரன்கள் இலக்கை எட்டினால் வங்கதேசம் அணி அதிக நெட் ரன் ரேட் பெற்று ஆஸ்திரேலியாவை முந்தி அரை இறுதிக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தததால் போட்டியில் புது ட்விஸ்ட் உருவானது. அதற்கு ஏற்ப அந்த அணி அதிரடியாக ஆரம்பித்தது. முதல் 2 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்து இருந்தது. ஆனால், அதன் பின் விக்கெட்களை இழக்கத் தொடங்கியது. வங்கதேச அணி சரியாக 11.4 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. சில நிமிடங்கள் கழித்து போட்டி மீண்டும் தொடங்கியது. அப்போது வங்கதேச அணி 19 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
ஏற்கனவே அதிக விக்கெட்களை இழந்து இருந்த வங்கதேச அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. டிஎல்.எஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா அணியை சந்திக்க உள்ளது ஆப்கானிஸ்தான். இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்த உலக கோப்பையை விட்டே வெளியேற்றப்ப்டடது. இதை இந்திய ரசிகர்களும் சேர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.