32 வருட வலி.. உணர்ச்சிவசப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர்கள்.. உலகக் கோப்பையில் மாபெரும் வரலாற்று சம்பவம்
டரூபா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா. இதன் மூலம் 32 வருடமாக கிரிக்கெட் தொடரின் எந்த ஒரு உலகக்கோப்பை இறுதி போட்டியிலும் விளையாட முடியாமல் தவித்து வந்த தென்னாப்பிரிக்காவின் சோகத்துக்கு முடிவு கட்டப்பட்டது.
கடந்த 1991 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி தடையிலிருந்து மீண்டு கிரிக்கெட் ஆடத் தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டு நடந்த 1992 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அரை இறுதி வரை முன்னேறி இருந்தது. அதில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. அடுத்து 1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியை தென் ஆப்பிரிக்கா டை செய்தது. ஆனால், சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் இருந்ததால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதனால், தென் ஆப்பிரிக்கா ஏமாற்றம் அடைந்தது.

இதற்கு அடுத்து 2007, 2015 மற்றும் 2023 என மொத்தமாக ஐந்து ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடர்களில் அரை இறுதி சுற்று வரை தென்னாப்பிரிக்கா முன்னேறி இருந்தது. ஆனால், ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை. அதே போல, டி20 உலகக் கோப்பையில் 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது. 2009 இல் பாகிஸ்தான் அணியிடமும், 2014 ஆம் ஆண்டு இந்திய அணியிடமும் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்து இருந்தது.
மொத்தம் ஏழு முறை உலகக் கோப்பை அரை இறுதி வரை முன்னேறி ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. கடந்த 32 ஆண்டுகளாக இந்த வேதனையுடனே இருந்தது அந்த அணி. அந்த அணியை இதன் காரணமாகவே "சோக்கர்ஸ்" என ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர். இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணியை 56 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அடுத்து 8.5 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா. இதன் மூலம் முதன்முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது அந்த அணி.


Click it and Unblock the Notifications