"ஒரு பைசா கூட வேணாம் ஆனா".. இந்திய ஜாம்பவான் செய்த செயல்.. நெகிழ்ந்து போன ஆப்கானிஸ்தான்
மும்பை: கடந்த 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக செயல்பட்டார் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா. ஆனால், அதற்காக ஒரு ரூபாய் கூட வேண்டாம் என சம்பளம் வாங்க மறுத்து விட்டதாகவும், அதற்கு பதிலாக வேறு ஒரு விஷயத்தை செய்யுமாறு ஆப்கானிஸ்தான் அணியை அவர் கேட்டுக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
2023 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றதால் இந்திய ஆடுகளங்களை பற்றி புரிந்து கொள்ளவும் பலமான அணிகளை எதிர்கொள்ள சரியான திட்டம் வகுக்கவும் அஜய் ஜடேஜாவின் உதவியை நாடியது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு. சரியாக உலகக்கோப்பை தொடர் துவங்க சில தினங்கள் இருக்கும் முன்னரே அவரிடம் பேசி அவரை அழைத்தது.

எந்த தயக்கமும் இன்றி உடனடியாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இணைந்து செயல்பட்டார் அஜய் ஜடேஜா. அந்த அணியின் பயிற்சியாளர் ஜொனாதன் டிராட் மற்றும் அஜய் ஜடேஜா வகுத்த வியூகங்கள் ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு நான்கு வெற்றிகளை பெற்றுத் தந்தது. அந்த அணியால் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தான் வெல்ல முடியும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் முக்கிய அணிகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகை அதிர வைத்தது ஆப்கானிஸ்தான்.
இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் என மூன்று பலமான அணிகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணியையும் வீழ்த்தி இருந்தது. ஐந்தாவதாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த ஆப்கானிஸ்தான் அணி கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அந்தப் போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடி 200 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார்.
அந்தப் போட்டியில் மேக்ஸ்வெல் விக்கெட்டை மட்டும் வீழ்த்தி இருந்தால் ஆப்கானிஸ்தான அணி வெற்றி பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ஆப்கானிஸ்தான அணி இந்த அளவுக்கு ஆடியது கிரிக்கெட் உலகில் பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. அதற்கு அஜய் ஜடேஜாவின் வியூகங்களும், ஆலோசனைகளும் முக்கிய காரணமாக இருந்தது.
இந்த நிலையில் தனது பணிக்கு அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் பெற்றுக் கொள்ளவில்லை என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் இது குறித்து பேசுகையில், 2023 உலகக் கோப்பை தொடர் நடந்து கொண்டிருந்தபோது பலமுறை அஜய் ஜடேஜாவிற்கு சம்பளம் அளிக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஒவ்வொரு முறையும் சம்பளம் வேண்டாம் என மறுத்து விட்டதாகவும் கூறினார். அதே சமயம், "ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறுவது மட்டுமே எனக்கு எனக்கு பணம், சன்மானம் எல்லாமே. அதுதான் எனக்கு தேவை" என்று அஜய் ஜடேஜா கூறி இருக்கிறார்.
இதுவரை அஜய் ஜடேஜா ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து எந்த சம்பளமும் பெறவில்லை என அந்த அணியின் உயர் அதிகாரி தெரிவித்தார். அதை அடுத்து பலரும் அஜய் ஜடேஜாவை பாராட்டி வருகின்றனர். 2024 டி20 உலக கோப்பை தொடரிலும் ஆப்கானிஸ்தான் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரிய அணியான நியூசிலாந்தை வீழ்த்தி அந்த அன் அணியை குரூப் சுற்றுடன் வெளியேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications