மும்பை : முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு பும்ராவை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இந்திய அணிக்கு பும்ரா கடவுள் கொடுத்த பரிசு எனவும், அவரை பார்ப்பது இந்தியர்கள் செய்த பாக்கியம் எனவும் கூறி புல்லரிக்க வைத்துள்ளார். அதேபோல சூர்யகுமார் யாதவையும் பாராட்டி தள்ளி இருக்கிறார். கிரிக்கெட் விளையாடும் அனைவருக்கும் அவர் எப்படி விளையாட வேண்டும் என பாடம் நடத்தியதாக பேசி இருக்கிறார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி, நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது. குரூப் சுற்றில் இந்திய அணி ஆடிய மூன்று போட்டிகளில், இரண்டு போட்டிகளில் பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார். அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட் வீழ்த்திய அவர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

அமெரிக்க அணிக்கு எதிராக விக்கெட் வீழ்த்தவில்லை என்ற போதும், சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். தற்போது அவர் 4 போட்டிகளில் 8 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவர் ஒரு ஓவருக்கு சராசரியாக 3.46 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பும்ராவின் செயல்பாடு குறித்து பேசிய அம்பத்தி ராயுடு, "எப்போதும் போலவே பும்ரா சிறப்பாக செயல்பட்டார். அவரிடம் எந்த சூழ்நிலையை கொடுத்தாலும் அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவராக இருக்கிறார். அவர் ஒரு அற்புதமான பந்துவீச்சாளர். இந்திய அணிக்கு கடவுள் கொடுத்த பரிசு. அதே போல இந்தியர்கள் அவரை காண்பதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும்" என்றார்.
அதே ஆப்கானிஸ்தான் போட்டியில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவின் பேட்டிங் பற்றி பேசிய அம்பத்தி ராயுடு, "சூர்யகுமார் யாதவ் சரியாக விதத்தில் விளையாடினார். கிரிக்கெட் விளையாடும் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும், அனைத்தும் இளைஞர்களுக்கும் ஒரு ஸ்லோவான பிட்ச்சில், பந்து வேகமாக வராத போது எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என அவர் விளையாடிக் காட்டினார். தனது கால்களையும், கிரீசையும் சரியாக பயன்படுத்தினார். தனக்கு இரண்டு மீட்டர் தூரம் முன்னே சென்று விளையாடினார். அதேசமயம் கிரீசுக்கு உள்ளே நின்றும் ஷாட்களை அடித்தார். உலகின் சிறந்த ஸ்பின்னர்களுக்கு எதிராக வளைவாக செல்லும் ஷாட்களை அடித்தார். அதனால்தான் அவர் டி20 கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குகிறார். இதுவரை உள்ள காலகட்டத்தில் அவர்தான் சிறந்த டி20 பேட்ஸ்மேன். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அவர் அதை சமாளித்து விளையாடுவார்." என்று அம்பத்தி ராயுடு பாராட்டினார்.