நியூயார்க் : இந்திய அணியின் ரிஷப் பண்ட் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கியதற்கான காரணம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் விளக்கம் கொடுத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக நீண்ட நாட்களுக்கு பின் களமிறங்கிய ரிஷப் பண்ட், முதல்முறையாக நம்பர் 3 வரிசையில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார். ஐபிஎல் தொடரில் கூட நம்பர் 4 வரிசையில் தான் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்துள்ளார்.

இதனால் ரிஷப் பண்ட் எப்படி ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் 26 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 36 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதிலும் அயர்லாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மெக்கர்தி வீசிய பந்தில் ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்கூப் மூலமாக சிக்ஸ் அடித்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வேகப்பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆர்ச்சர் ஆகியோரின் பவுலிங்கில் ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்கூப் மூலம் சிக்ஸ் அடித்துள்ளார். தற்போது காயத்திற்கு பின்னரும் ரிஷப் பண்ட் தனது பாணியில் எந்த அச்சமும் இல்லாமல் ஆடுவது ரசிகர்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பேசுகையில், இந்த பிட்ச் இரு அணி பேட்ஸ்மேன்களுக்கும் சவாலானது தான்.
ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் இதே பிட்சில் ஆடியதால், இதுபோன்ற பிட்சை தான் எதிர்பார்த்தோம். இதனால் அதற்கேற்ப பேட்டிங் ஆர்டரையும், பவுலர்களையும் தயார் செய்தோம். அதேபோல் இந்திய அணியில் உள்ள வீரர்களின் திறமையில் எந்த பிரச்சனையும் இல்லை. அதேபோல் போதுமான அனுபவமும் இருப்பதால், நிச்சயம் லீக் போட்டிகளில் பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன்.
ரிஷப் பண்ட் ஆட்டத்தை பற்றி கூற வேண்டுமென்றால், அவர் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். பயிற்சி ஆட்டத்திலும் அரைசதம் அடித்தார். இந்த போட்டியிலும் விக்கெட்டை கொடுக்காமல் விளையாடி இருக்கிறார். இந்திய அணிக்கு இது சாதகமாக உள்ளது. இந்த நேரத்தில், இந்த சூழலில் ரிஷப் பண்ட் தான் எங்களின் நம்பர் 3 வீரர். அவர் இடதுகை பேட்ஸ்மேனாக இருப்பதும் அவர் அந்த பேட்டிங் வரிசையில் களமிறங்குவதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.