AFG vs AUS: கிளென் மேக்ஸ்வெல் செய்த செயல்.. கதிகலங்கிப் போன ஆப்கன் வீரர்கள்.. வென்றது எப்படி?
செயின்ட் வின்சென்ட்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். ஆனால், இந்த போட்டியில் தனி ஆளாக நின்று ஆப்கானிஸ்தான அணியை கதிகலங்க வைத்தார் கிளென் மேக்ஸ்வெல். 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையிலும் இதே போன்ற சூழ்நிலையில் அவர் இரட்டை சதம் அடித்து ஆப்கானிஸ்தானின் வெற்றியை பறித்து அவர்களை சுக்கு நூறாக உடைத்து இருந்தார்.
அதேபோன்ற ஒரு இன்னிங்ஸை இப்போதும் அவர் ஆடினார். அரைசதம் அடித்து ஆப்கானிஸ்தான் வீரர்களை பதற வைத்தார். எனினும், அவரை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி நடந்த பிட்ச் பேட்டிங் செய்ய கடினமான ஒன்றாக இருந்தது. எனினும், ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தனர். ரஹ்மானுல்லா குர்பாஸ் 60 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் 51 ரன்களும் சேர்த்தனர். ஆப்கானிஸ்தான் 148 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார். டேவிட் வார்னர் 3 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து கிளென் மேக்ஸ்வெல் நான்காம் வரிசையில் களமிறங்கினார். கேப்டன் மிட்செல் மார்ஷ் மூன்றாம் வரிசையில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ஒரு பக்கம் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி வந்த நிலையில் மறுபக்கம் ஆஸ்திரேலியா வரிசையாக விக்கெட்களை இழந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் 11 ரன்களிலும், டிம் டேவிட் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அப்போது கிளென் மேக்ஸ்வெல் அரைசதம் கடந்தார். அவர் மீண்டும் 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் 7 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் இரட்டை சதம் அடித்து ஆப்கானிஸ்தான் வெற்றியை தட்டிப் பறித்ததை போன்று மீண்டும் செய்வாரோ என ஆப்கானிஸ்தான் வீரர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.
குறிப்பாக மேக்ஸ்வெல் அரை சதம் அடித்த போது ஆப்கானிஸ்தான் வீரர்களின் உடல் மொழி சரிந்தது. அப்போது பந்துவீச்சு ஆலோசகர் பிராவோ வெளியில் இருந்து அவர்களுக்கு ஆலோசனைகள் கூறி நம்பிக்கை அளித்து வந்தார். இந்த நிலையில் 15வது ஓவரில் மேக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அதன் பின் உற்சாகமடைந்த ஆப்கானிஸ்தான் அணி அடுத்த ஓவரிலேயே மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்தியது. அதன் பின் பின்வரிசை வீரர்களால் ரன் குவிக்க முடியாததால் ஆஸ்திரேலிய அணி தோல்வியை நோக்கி சென்றது. குறிப்பாக ஃபீல்டிங்கில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.
ஆஸ்திரேலியா அணி இந்தப் போட்டியில் சில கேட்ச்களை தவற விட்டிருந்தது. ஆனால், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் கலக்கிய ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவை 127 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான அணி வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications