பிரிட்ஜ்டவுன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் திமிராக நடந்து கொண்டார். பந்துவீச்சின் போது அவர் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் விக்கெட்டை வீழ்த்திய பின் அவரைப் பார்த்து கிண்டல் செய்யும் வகையில் சைகை செய்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் பேட்டிங் செய்தபோது அதற்கு பதிலடி கொடுத்தார் ரஹ்மானுல்லா குர்பாஸ்.
ஆஸ்திரேலியா வீரர்களின் இந்த எல்லை மீறிய செயல்களுக்கு ஏற்ப அந்த அணி இந்த போட்டியில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. என்ன நடந்தது?

2024 டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டி பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் ரஹ்மானுள்ள குர்பாஸ் மற்றும் இப்ராகிம் சத்ரான் நிலையாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தனர். அவர்கள் விக்கெட்டை வீழ்த்த முடியாததால் கடும் அழுத்தத்தில் இருந்தது ஆஸ்திரேலிய அணி.
இந்த நிலையில் மார்கஸ் ஸ்டோனிஸ் வீசிய 16 வது ஓவரில் ரஹ்மானுல்லா குர்பாஸ், டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது குர்பாசை பார்த்து மார்கஸ் ஸ்டோனிஸ் "வெளியே போ, வெளியே போ" என சைகை செய்தார். அதை கிண்டல் செய்யும் தொனியில் அவர் செய்திருந்தார். அதனால் கோபம் அடைந்தார் குர்பாஸ். எனினும், அதை வெளிக்காட்டாமல் ஆடுகளத்தை விட்டு சென்றார்.
அதன் பின் ஆஸ்திரேலிய அணி சேஸிங் செய்த போது விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த போது மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆடி வந்தனர். அப்போது பிட்ச் கடினமாக இருந்ததால் மார்கஸ் ஸ்டோனிஸ் ரன் குவிக்க முடியாமல் திணறினார்.
அப்போது விக்கெட் கீப்பராக அவருக்கு பின்னே நின்று இருந்த குர்பாஸ் அவரை சகட்டுமேனிக்கு திட்டினார். அதனால், அமைதி இழந்த நிலையில் மார்கஸ் ஸ்டோனிஸ் பேட்டிங் செய்து வந்தார். பின்னர் 17 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ரஹ்மானுல்லா குர்பாசிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இதை அடுத்து அவரது திமிரான செயலுக்கு குர்பாஸ் பதிலடி கொடுத்து அவரது விக்கெட்டை கொண்டாடினார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணி வலுவான அணி என்ற போதும், உலகிலேயே அதிக உலகக் கோப்பைகளை வென்ற அணி என்ற போதும் ஆப்கானிஸ்தானை குறைத்து எடை போட்டு அந்த அணியின் வீரர்களை மட்டம் தட்டியதன் பலனை அதே போட்டியிலேயே அனுபவித்தது. சில ரசிகர்கள், மார்கஸ் ஸ்டோனிஸ் ரஹ்மானுல்லா குர்பாஸ்-ஐ கிண்டல் செய்தது அவரது கிரிக்கெட் வாழ்வில் செய்த மாபெரும் தவறு என குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலிய அணியின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தங்களின் கடைசி சூப்பர் 8 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தினால் மட்டுமே ஆஸ்திரேலியா அணிக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும்.