பிரிட்ஜ்டவுன் : 2024 டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸில் நடந்த முதல் போட்டியில் மைதானம் காலியாக இருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அமைப்பால் பொருளாதார ரீதியாக ஒட்டுமொத்த உலகக் கோப்பை தொடரை நடத்த முடியாது என்பதால் அமெரிக்காவையும் சேர்த்துக் கொண்டது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). இதன் மூலம் அமெரிக்காவில் டி20 கிரிக்கெட்டை பிரபலமாக்குவது அதன் நோக்கமாக இருந்தது.

அதேசமயம் வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்து போய் இருக்கும் நிலையில் அதையும் மீட்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக வெஸ்ட் இண்டீஸ் அணி தனது சொந்த மண்ணில் ஆடிய முதல் போட்டியிலேயே அந்த அணியின் ரசிகர்கள் மைதானத்திற்கு வராதது பெரும் அதிர்ச்சி அளித்தது.
இதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை விளாசி வருகிறார்கள். இந்த மோசமான நிலைக்கு முதல் காரணமாக டிக்கெட் விலையை பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர். இந்தியா ஆடும் போட்டிகளைத் தவிர மற்ற போட்டிகளுக்கு டிக்கெட் விலையை வெகுவாக குறைத்தால் மட்டுமே அங்குள்ள மக்கள் பெருமளவில் திரண்டு வந்து உலகக்கோப்பை போட்டிகளை நேரில் காண்பார்கள்.
அதற்கு அடுத்து போட்டி அட்டவணையில் நடந்த சில குளறுபடிகளுக்கு இந்திய அணியே காரணம் என சிலர் குற்றம் சுமத்துகிறார்கள். இந்திய ரசிகர்களே உலகில் அதிகம் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கள் என்பதால் அனைத்து போட்டிகளும் இந்திய பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
அதாவது வெஸ்ட் இண்டீஸ் ஆடிய முதல் போட்டி அந்த நாட்டின் நேரப்படி காலை 10:30க்கு நடைபெற்றது. பொதுவாக இரவு நேரங்களில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கு தான் பார்வையாளர்கள் அதிக அளவில் வருவார்கள். அதன்படி அனைத்து போட்டிகளையும் இரவு ஏழு மணிக்கு மேல் நடத்தி இருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு சில போட்டிகளும், இரவு 8 மணிக்கு சில போட்டிகளும் நடைபெறும் வகையில் அட்டவணையை தயார் செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
அதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸில் பகல் நேரத்தில் நடக்கும் போட்டிகளுக்கு மக்கள் வரவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிய முதல் போட்டியிலும் அதுதான் நடந்தது. அது மட்டும் இன்றி இந்த உலகக் கோப்பையில் 20 அணிகள் விளையாடுகின்றன. பொதுவாக பலம் வாய்ந்த அணிகள் என எடுத்துக் கொண்டால் அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு அணிகள் மட்டுமே உள்ளன.
இந்த நிலையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று இருப்பதால் பலவீனமான அணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் போட்டிகளில் சுவாரஸ்யம் குறைவாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து இந்த தொடருக்கான பிட்ச்கள் மிகவும் மந்தமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் - பப்புவா நியூகுனியா அணிகள் மோதிய போட்டியின் பிட்ச் மந்தமாக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 137 ரன்கள் இலக்கை எட்டவே 19 ஓவர்கள் எடுத்துக் கொண்டது.
அதேபோல நமீபியா - ஓமன் அணிகள் ஆடிய போட்டியில் இரண்டு அணிகளுமே 20 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதை அடுத்து இந்த உலகக்கோப்பை தொடரில் டி20 போட்டிக்கான சுவாரஸ்யமே இல்லை என அனைவரும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.