ஃப்ளோரிடா: 2025 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அமெரிக்க வீரரான ஆரோன் ஜோன்ஸ்-ஐ நிச்சயமாக வாங்கும் என இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அமெரிக்க அணியில் இடம் பெற்று ஆடி வரும் ஆரோன் ஜோன்ஸ் வெஸ்ட் இண்டீஸ் குழும நாடுகளில் ஒன்றான பார்போடோசை சேர்ந்தவர். அங்கு தனக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார்.

தற்போது நடந்து வரும் 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் மிகச் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேன் ஆன அவர் கனடா அணிக்கு எதிராக தோல்வியை நோக்கி சென்ற போட்டியை தலைகீழாக மாற்றி 96 ரன்கள் அடித்து வெற்றி பெற்று தந்தார். அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி 36 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணிக்கு எதிராக தற்காலிக கேப்டனாக செயல்பட்ட ஆரோன் ஜோன்ஸ் இந்திய அணிக்கு கடும் அழுத்தம் ஏற்படுத்தினார். இப்படி அவரின் முதிர்ச்சியான செயல்பாடு ஐபிஎல் அணிகளை ஈர்த்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட முக்கிய கிரிக்கெட் அணிகளை சேர்ந்த வீரர்களை ஐபிஎல் அணிகளில் சேர்த்தால் அவர்கள் பாதி தொடரிலேயே விலகி விடுகிறார்கள். இது பிளே ஆஃப் சுற்றின் போது ஐபிஎல் அணிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வங்கதேச வீரர் முஸ்தாபிசூர் ரஹ்மான் மற்றும் இலங்கை பந்துவீச்சாளர் பதிரானா ஆகியோர் தங்கள் நாட்டு கிரிக்கெட் அமைப்பின் கட்டாயத்தால் பாதி தொடரில் விலகினார்கள். பல்வேறு ஐபிஎல் அணிகளை சேர்ந்த ஒன்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னரே விலகினார்கள்.
இதுபோல முக்கிய அணிகளின் வீரர்களை ஐபிஎல் ஏலத்தில் வாங்கினால் அவர்கள் பாதி தொடரில் விலகி விடுகிறார்கள். அதே சமயம் சிறிய அணிகளை சேர்ந்த வீரர்களை ஐபிஎல் அணிகளில் சேர்த்துக் கொண்டால் அவர்கள் தொடர் முடியும் வரை தங்களின் ஐபிஎல் அணியுடனே இருப்பார்கள். மேலும், ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் தங்களுடைய திறமையையும், அனுபவத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்பதால் ஐபில் அணிகளுக்கு விசுவாசமாக இருப்பார்கள்.
இதை கருத்தில் கொண்டு தற்போது 2024 டி20 உலக கோப்பையில் ஆடிவரும் கத்துக்குட்டி அணிகளில் இடம்பெற்றுள்ள சிறந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் குறி வைத்துள்ளன. அந்த வகையில் ஆரோன் ஜோன்ஸுக்கு சிஎஸ்கே அணி குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தற்போது 29 வயதாகிறது. அதிரடி பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். கேப்டன் ஆகவும் முதிர்ச்சியுடன் செயல்பட்டு இருக்கிறார். இதுபோன்ற வீரர்களை சிஎஸ்கே அணி தங்கள் பாணியில் பட்டை தீட்டி சிறந்த வீரராக மாற்றுவதை கடந்த காலங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். எனவே, ஆரோன் ஜோன்ஸ்-ஐ சிஎஸ்கே அணி 2025 ஐபிஎல் ஏலத்தில் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.