நியூயார்க் : இந்திய கிரிக்கெட் அணியின் தூணாக இருப்பவர் பும்ரா. இந்திய அணியின் பந்துவீச்சை தனி ஆளாக சுமந்து வருகிறார். குறிப்பாக டி20 அணியை பொறுத்தவரை எதிரணியை அச்சுறுத்தக்கூடிய ஒரே இந்திய பந்து வீச்சாளராக இருக்கிறார் பும்ரா.
குறிப்பாக அவர் விக்கெட் வீழ்த்தும் விகிதத்தை விட ரன்களை கட்டுப்படுத்துவதில் உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளராக செயல்பட்டு வருகிறார். 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமான தோல்விகளை சந்தித்தபோதும் பும்ரா மட்டுமே அந்த அணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 20 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் ஒரு ஓவருக்கு சராசரியாக 6.48 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே சராசரியாக ஒரு ஓவருக்கு மிகக் குறைவாக ரன்கள் விட்டுக் கொடுத்தவர் பும்ரா தான்.
அவர் சர்வதேச டி20 போட்டிகளில் 61 இன்னிங்ஸ்களில் 74 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஒரு ஓவருக்கு சராசரியாக 6.5 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். எந்த பிட்ச்சாக இருந்தாலும் அதில் எதிரணியை கதிகலங்க செய்வதில் பும்ரா முக்கிய பங்கு வகிக்கிறார். அவரது ஓவர்களில் பவுண்டரி அடிக்கவே முடியாமல் திணறுகின்றனர் எதிரணியினர்.
பும்ராவுக்கு இத்தனை சாதகங்கள் இருந்தாலும் அவரை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொண்டால் தான் வெற்றி பெற முடியும். உதாரணத்திற்கு, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால், அந்த அணி அதிக அளவில் வெற்றி பெறவில்லை. அதற்கு காரணம், பும்ராவை சுற்றி பந்துவீச்சை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அந்த விஷயத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெளிவாக திட்டமிட வேண்டும்.