மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை முதல் சூப்பர் 8 சுற்றுகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை செல்லும் என்று சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அமெரிக்க ஆடுகளத்தை விட வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளம் வித்தியாசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கணித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் நிச்சயமாக குல்திப் யாதவை இந்திய அணி சேர்க்க வேண்டும். இதன் மூலம் விக்கெட்டுகள் எடுக்கும் வாய்ப்பை இந்தியா பெறும். இதனால் ஒரே மாதிரி வைத்துக் கொண்டு விளையாடி தங்களுக்கு ஏதுவான வாய்ப்பை இந்தியா வீணடிக்காது என்று நினைக்கின்றேன்.
மிட்செல் சாண்ட்னரும், ஜடேஜாவும் ஒரே மாதிரியான பணியை தான் சிஎஸ்கே அணிக்கு செய்வார்கள். இதனால் ஒரே மாதிரியான திறனுடைய வீரர்களை எப்படி எட்டு ஓவராக பயன்படுத்துவது என்று யோசிப்போம். எனினும் அவர்களிடம் ஒரே மாதிரியான திறமை இருந்தாலும் வித்தியாசமாக பந்துவீசுவார்கள். பல சூழல்கள் அவர்களுக்கு ஏற்ற வகையில் இருந்தால் இவ்விருவரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
ஜடேஜாவுக்கு பேட்டிங் நன்றாக தெரியும். இதனால் ஜடேஜாவை சரியான கள சூழலில் பயன்படுத்தினால் நிச்சயம் அவர் ஒரு அபாயகரமான வீரராக எதிர் அணிக்கு திகழ்வார். இதை நாங்கள் பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறோம். இதனால் அக்சர் பட்டேல், ஜடேஜா என இருவரையும் இந்திய அணி பயன்படுத்தலாம்.
இடதுகை சுழற் பந்துவீச்சாளர்கள் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வீச முடியாது என்ற பேச்சை நான் அறவே வெறுக்கின்றேன். அப்படி எல்லாம் கிடையாது இடது கை பந்து வீச்சாளர்களால் யாருக்கு வேண்டுமானாலும் பந்து வீச முடியும். ஜெய்ஸ்வால் போன்ற ஒரு திறமை வாய்ந்த வீரருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்றால் அந்த அணி எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள் என கேட்டால், இறுதிப் போட்டிக்கு இந்திய அணி நிச்சயம் தகுதி பெற்று விடும்.
இந்த தொடரில் யார் பலம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்களை வைத்திருக்கிறார்களோ, அவர்கள் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்துவார்கள். இனி முக்கியமான ஆட்டத்தில் நாம் எப்படி விளையாட போகிறோம் என்பதில்தான் யார் வெற்றி பெறுவார் தோல்வி பெறுவார் என்பது இருக்கிறது என ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.