பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்த போட்டிக்கு பின் இந்திய அணி வீரர்கள் அனைவரும் கண்ணீருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், கடந்த 3 - 4 ஆண்டுகளாக நாங்கள் அடைந்த தோல்விகளுக்கு பின் இறுதியாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. இதனை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. தனித்தனியாகவும், ஒரு அணியாகவும் இணைந்து கடினமாக உழைத்தோம். இந்த வெற்றிக்கு பின் ஏராளமான விஷயங்கள் உள்ளது.

இது வெறும் இன்றைய நாளுக்கானது மட்டுமல்ல. கடந்த 3-4 ஆண்டுகளுக்கான உழைப்பின் ஊதியமாக நினைக்கிறேன். இதற்கு முன்பாக பல அழுத்தம் நிறைந்த இறுதிப்போட்டிகளில் விளையாடிய போது, தோல்வியடைந்து சோகமாக இருந்திருக்கிறோம். ஆனால் இம்முறை ஒவ்வொரு வீரரும் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்திருந்தோம். இந்த போட்டியின் இடையிலேயே ஆட்டம் தென்னாப்பிரிக்கா பக்கம் சென்றதை உணர்ந்தேன். ஒரு அணியாக ஐசிசி தொடரின் வெற்றி எங்களுக்கு தேவையாக இருந்தது.
இந்திய வீரர்கள், நிர்வாகம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளோம். எங்களுக்கு ஏராளமான சுதந்திரம் அளிக்கப்பட்டது. இந்த தொடர் முழுக்கவே அற்புதமான பயணமாக அமைந்தது. விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து நான் மட்டுமல்ல, வேறு யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. அவரின் தரம் எங்களுக்கு நன்றாக தெரியும். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட்டின் உச்சத்தில் இருக்கும் வீரர். முக்கியமான தருணங்களில் தான் ஜாம்பவான் வீரர்கள் முன் நிற்பார்கள்.
விராட் கோலி ஒருமுனையில் நின்று ஆடிய ஆட்டத்தால், மற்றவர்கள் அவரை சுற்றி விளையாட முடிந்தது. ஒரு அணியாக இணைந்து அந்த இலக்கை எட்டினோம் என்றே கூற வேண்டும். அதேபோல் கடைசி வரை நின்று ஒருவர் விளையாட வேண்டிய தேவையும் இருந்தது. சாதாரணமாக களமிறங்கிய உடனே அதிரடியாக விளையாடும் வகையிலான விக்கெட் அல்ல இது. நீண்ட நேரம் விளையாடி ரன்கள் சேர்க்க வேண்டிய பிட்ச் இது. அதனை விராட் கோலி சிறப்பாக செய்துள்ளார். அதனை அவரின் அனுபவத்தின் மூலம் செய்து காட்டியுள்ளார்.
அக்சரின் படேலின் 47 ரன்களும் மிகமுக்கியமானவை. பும்ராவின் பவுலிங்கை பற்றி வார்த்தைகளில் சொல்ல முயற்சிக்கிறீர்கள். ஆனால் நான் நீண்ட ஆண்டுகளாக அவருடன் இணைந்து விளையாடி வருகிறேன். எனக்கு அவரிடம் என்ன இருக்கிறது என்று தெரியாது. அவரால் என்ன செய்ய முடியும் என்று நன்றாக தெரியும். அவரின் திறமை மீது அவருக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அதனை தான் பவுலிங்கில் வெளிப்படுத்துகிறார். கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா மிகச்சிறப்பாக வீசினார்.
இந்திய அணியை நினைத்து பெருமை கொள்கிறேன். நியூயார்க்கில் இருந்து பார்படாஸ் வரையிலான பயணத்திற்காக ரசிகர்களுக்கும் சல்யூட் சொல்லி கொள்கிரேன். நேரில் வந்து ஆதரவளித்தவர்களுக்கும் சரி, இந்தியாவில் கண் விழித்து பார்த்து கொண்டாடுபவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் எத்தனை ஆண்டுகளாக காத்திருக்கிறோமோ, அதேபோல் இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்களும் இந்த கொண்டாட்டத்திற்காக காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.