பார்படாஸ்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டி இன்று இரவு நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளின் வீரர்களும் முழுமையாக தயாராகி வருகின்றனர். இந்த போட்டியை காண பல்வேறு நாட்டில் இருந்து ரசிகர்கள் பார்படாஸ் மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.
இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று 11 ஆண்டுகளாகிவிட்டது. அதேபோல் தென்னாப்பிரிக்கா அணி ஐசிசி கோப்பையை வென்று 26 ஆண்டுகளாகிவிட்டது. இதனால் எந்த அணி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த டி20 உலகக்கோப்பையில் இரு அணிகளும் எந்த அணியுடனும் தோல்வியை சந்திக்கவில்லை.

பவுலிங்கில் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதவுள்ளதால், எந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுகிறார்களோ, அவர்களே வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை ரபாடா, நார்கியே, யான்சன், ஷம்சி, மஹாராஜ் மற்றும் மார்க்ரம் ஆகியோர் பவுலிங் செய்து வருகின்றனர்.
இதில் நட்சத்திர பந்துவீச்சாளர் ககிலோ ரபாடா இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்திய அணியின் டாப் ஆர்டருக்கு ரபாடா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ரபாடா பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கின்றனர்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ரபாடா பவுலிங்கில் 4 முறையும், சூர்யகுமார் யாதவ் 3 முறையும் ஆட்டமிழந்துள்ளனர். சூர்யகுமார் யாதவ் ரபாடாவை எதிர்த்து சிறப்பாக ஆடியிருந்தாலும், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் ரபாடாவுக்கு எதிராக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.
அதேபோல் நார்கியேவும் விராட் கோலிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோசமான ஃபார்மில் இருக்கும் விராட் கோலி, கூடுதல் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொடக்கத்திலேயே ரபாடாவை அட்டாக் செய்தால் மட்டுமே இந்திய அணியால் நல்ல இலக்கை நிர்ணயிக்க முடியும் என்று கணிக்கப்படுகிறது.