பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத தென்னாப்பிரிக்கா அணியும், கடந்த 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வரும் இந்திய அணியும் விளையாடுகின்றன.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா அணி முன்னேறும் என்று ஒரு மாதத்திற்கு முன் யாராவது கூறியிருந்தால் நம்பியிருக்க மாட்டோம். ஏனென்றால் நாக் அவுட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணியின் வரலாறு அப்படிதான் இருந்திருக்கிறது. கடந்த உலகக்கோப்பை தொடரில் கூட அனைத்து அணிகளையும் வெளுத்து கட்டி தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு வந்தது.

ஆனால் அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியா அணியிடம் தென்னாப்பிரிக்கா பெட்டிப் பாம்பாக அடங்கியது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா அணி முதல்முறையாக முன்னேறி வரலாறு படைத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் தலைமையில் பலமான பவுலிங் மற்றும் அதிரடியான பேட்ஸ்மேன்கள் என்று பட்டையை கிளப்புகின்றனர்.
இருந்தாலும் இந்திய அணியே கோப்பையை வெல்லும் என்று விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் கணிப்பை வெளியிட்டு வருகின்றனர். ஏனென்றால் ரோகித் சர்மாவின் கேப்டன்சியும், நாக் அவுட் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரமும் ஐசிசி கோப்பையை கேப்டனாகவே வென்றுள்ளார்.
2014ஆம் ஆண்டு நடந்த யு19 உலகக்கோப்பை தொடரை எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி அபாரமாக வென்று சாதனை படைத்தது. அந்த அணியில் ரபாடாவும் விளையாடி இருக்கிறார். இதன் காரணமாகவே பவுமாவிற்கு முன்பாகவே மார்க்ரமுக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அனுபவம் இல்லாததன் காரணமாக மார்க்ரம் கேப்டன்சியில் இருந்து விலகினார்.
தற்போது எஸ்ஏ20 லீக்கை தொடர்ச்சியாக 2 முறை வென்ற கேப்டன், யு19 சாம்பியன் உள்ளிட்ட அடையாளங்களுடன் மார்க்ரம் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் களமிறங்குகிறார். இதனால் தென்னாப்பிரிக்கா அணியையோ, மார்க்ரமின் கேப்டன்சியையோ இந்திய அணியும், ரசிகர்களும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.