ஃப்ளோரிடா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறி உள்ளது. கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான், அடுத்து இந்திய அணியிடமும் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக அந்த அணி குரூப் சுற்றுடன் வெளியேறி உள்ளது.
இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான அணி எந்த உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அணியில் இருக்கும் குழு மனப்பான்மையை சுட்டி காட்டி முன்னாள் வீரர் அகமது சேஷாத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஐந்து வீரர்களின் பெயர்களை குறிப்பிட்டு இவர்களால் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மோசமான நிலையில் இருக்கிறது என வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது பற்றி அகமது சேஷாத் பேசுகையில், "கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக பாபர் அசாம், ஷஹீன் அப்ரிடி, ஃபாக்கர் ஜமான், முகமது ரிஸ்வான் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கு அதிக கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், அணியில் ஒரு குழுவை உருவாக்கி அவர்கள் ஒருவரை ஒருவர் தற்காத்துக் கொள்கிறார்கள். "நாங்கள் எங்கள் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வோம்" என்கிறார்கள். ஆனால், நீங்கள் எதை கற்றுக் கொள்கிறீர்கள்? கனடா அணிக்கு எதிரான போட்டியில் நீங்கள் அதிக நெட் ரன் ரேட்டை பெற வேண்டும் என்பதால் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஆனால், அந்தப் போட்டியில் ரிஸ்வான் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். பாபர் அசாமும் மெதுவாக விளையாடினார். அவர்களுடைய தனிப்பட்ட சாதனைகளுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் நாசமாக்கப்பட்டு இருக்கிறது." என்றார்.
மேலும், "அணியின் தலைமையை பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். உண்மையில் பாகிஸ்தான் அணியில் அப்படி ஒன்று இல்லவே இல்லை. கேப்டன் பாபர் அசாம் ஒரு சமூக வலைதள ராஜா. அவருக்கு முன்னேறுவதற்கு நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் அளிக்கப்பட்டு விட்டது. ஆனால், அவர் எதையும் வென்று கொடுக்கவில்லை. அணியில் இருக்கும் வீரர்களின் உடற் தகுதியும் சரியாக இல்லை. அணியில் அரசியல் செய்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் அதன் உச்சத்தில் இல்லை. அதன் சரிவை சந்தித்து வருகிறது." என்றார் அகமது சேஷாத்.
மேலும், "பாபர் அசாம் நட்பை வளர்ப்பதில் மட்டுமே சரியாக செயல்பட்டு வருகிறார். மொஹ்சின் நக்வி பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக வந்ததிலிருந்து இரண்டு மிகப்பெரிய தவறுகளை செய்தார். ஒன்று பாபர் அசாமை மீண்டும் கேப்டனாக நியமித்தது. இரண்டாவது வஹாப் ரியாஸை தேர்வுக் குழு தலைவராக நியமித்தது. அவர் முடிவுகளை எடுப்பதில் தொழில் முறை தர்மத்துடன் செயல்படவில்லை. குழு மனப்பான்மையின் காரணமாக எட்டு வீரர்களை அணியிலிருந்து நீக்கக் கூடாது என அவருக்கு அழுத்தம் அளிக்கப்பட்டது. அந்த வீரர்களை அணியில் இருந்து நீக்காமல் போனால், அணியில் இடம் கிடைக்காமல் வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு செய்யும் அநீதியாகும்" என்று பொங்கினார் அகமது சேஷாத்.
முன்னதாக வாசிம் அக்ரம் போன்றவர்களும் பாகிஸ்தான் அணியில் இருந்து பெரும்பான்மையான வீரர்களை நீக்கி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். பாபர் அசாம் இனியும் கேப்டனாக செயல்படுவது கடினமே.