மும்பை : இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் தொடர்பான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று ராகுல் டிராவிட் கேட்டுக் கொண்டதால், பிசிசிஐ தரப்பில் அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் குழுவினர் ஈடுபட்டனர். இந்த நிலையில் கேகேஆர் அணியின் ஆலோசகராக உள்ள கவுதம் கம்பீர் பயிற்சியாளர் ரேஸில் முன்னிலையில் இருப்பது தெரிய வந்தது.

ஜூன் 27ஆம் தேதி பயிற்சியாளருக்கான விண்ணப்பம் அளிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 20 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை யாரெல்லாம் விண்ணப்பித்துள்ளனர் என்ற தகவல் கூட வெளியிடப்படவில்லை. இதனால் நேரடியாக கவுதம் கம்பீர் பயிற்சியாளராக நியமனம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் தொடர்பான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பேட்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளருக்கான தேடலிலும் கவுதம் கம்பீர் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பேட்டிங் பயிற்சியாளராக உள்ள விக்ரம் ரத்தோர், ரவி சாஸ்திரி பொறுப்பில் இருந்த போது, ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழும் விக்ரம் ரத்தோர் செயல்பட்டு வருகிறார். ஆனால் கவுதம் கம்பீர் ஒட்டுமொத்த பயிற்சியாளர் அணியையும் மாற்றும் முடிவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் விக்ரம் ரத்தோர், பராஸ் ஆம்ரே மற்றும் திலீப் ஆகியோரின் ஒப்பந்தம் முடிவுக்கு வர வாய்ப்புகள் உள்ளது. இதனால் கவுதம் கம்பீருடன் புதிய பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களாக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.