மும்பை : 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் இரண்டு பிரிவுகளாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அதில் முதற்கட்டமாக ரோஹித் சர்மா, பும்ரா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட ஒன்பது வீரர்கள் அடங்கிய குழு அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றது.
ஹர்திக் பாண்டியா முதற்கட்டமாக செல்லும் வீரர்கள் குழுவில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அந்த குழுவில் இடம் பெறவில்லை. இதை எடுத்து ஹர்திக் பாண்டியா எங்கே? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றில் கடைசி இடத்தை பிடித்து மோசமான தோல்வியை தழுவி இருந்தது.

அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில் அந்த அணியில் இடம்பெற்று இருந்த இந்திய வீரர்கள் முதற்கட்டமாக அமெரிக்காவுக்கு செல்லும் குழுவில் இடம் பெற்றார்கள். அந்த வகையில் மும்பை அணியின் ரோஹித் சர்மா, பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றுள்ளனர்.
ஆனால், ஹர்திக் பாண்டியாவை மட்டும் காணவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே ஹர்திக் பாண்டியாவால் மிகப் பெரும் விரிசல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்விலும் மனைவியுடன் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் அவரை விட்டு பிரிய உள்ளதாகவும், விவாகரத்து வாங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருவரும் இது குறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா டி20 உலக கோப்பைக்கான அணியுடனும் பயணிக்கவில்லை என்பதால் அவரது நிலை என்ன என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் அவர் விவாகரத்து சிக்கல் காரணமாக செல்லவில்லை என கூறி வருகின்றனர். மேலும் சிலர், ஹர்திக் பாண்டியா தற்போது லண்டனில் தனிப்பட்ட முறையில் பயிற்சிகள் செய்து வருவதாகவும் அவர் அங்கிருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு சென்று இந்திய அணியுடன் இணைவார் எனவும் கூறுகின்றனர்.