மும்பை : 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு துணை கேப்டன் பதவி கிடைக்காது என கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் ரிஷப் பண்ட் தான்.
2022 டிசம்பர் மாதம் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கும் முன்பு வரை இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருந்தார். இடையே ஒரு டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு இருந்தார். அவரது காயத்தால் ஹர்திக் பாண்டியா டி20 அணியின் துணை கேப்டனாக ஆனார்.

இடையே ஹர்திக் பாண்டியாவும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். தற்போது இருவருமே 2024 ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக செயல்பட்டு வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகி இருக்கும் ஹர்திக் பாண்டியா படுமோசமாக செயல்பட்டு இருக்கிறார். அந்த அணி அவரது தலைமையில் ஒன்பது போட்டிகளில் ஆறு தோல்விகளை சந்தித்து இருக்கிறது. மேலும், ஒவ்வொரு போட்டியின் தோல்விக்கு பின்பும் ஹர்திக் பாண்டியா பேசும் பேச்சுக்கள் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பின் பேசுகையில் மும்பை அணியில் அதிக ரன் குவித்த திலக் வர்மா ஒரு ஓவரில் சில பந்துகளை வீணடித்தார் என நியாயமே இல்லாத ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். இது ஒரு நல்ல கேப்டனுக்கு அழகில்லை என பலரும் விமர்சனம் செய்தனர்.
மறுபுறம் ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக 11 போட்டிகளில் ஆறு தோல்விகளை சந்தித்து இருக்கிறார். இவரது கேப்டன்சியும் சராசரியாகவே இருக்கிறது. ஆனால், டெல்லி அணியில் சரியான அனுபவ வீரர்கள் இல்லாத நிலையிலும் அவர் அணியை சமாளித்து வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்திய டி20 அணியின் துணை கேப்டன் பதவி ரிஷப் பண்ட்டுக்கு அளிக்கப்படும் என கூறப்படுகிறது. ஒருவேளை ரிஷப் பண்ட்டுக்கு துணை கேப்டன் பதவியை அளிப்பதில் தேர்வுக் குழுவினர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரிடையே மாற்றுக் கருத்துக்கள் நிலவினால் பும்ரா, சூர்யகுமார் யாதவ் அல்லது மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
பந்துவீச்சில் பும்ரா உலகின் முதல்நிலை வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார். அதே போல சூர்யகுமார் யாதவ் டி20 பேட்டிங்கில் உலகிலேயே முதல் இடத்தில் இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் மூத்த வீரர் ஆவார். விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு அடுத்து அதிக அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவருக்கும் துணை கேப்டனாக வாய்ப்பு அளிக்கப்படலாம். ஆக மொத்தத்தில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.