மியாமி: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. தற்போது அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய அணியின் குரூப் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்திய அணி தனது குரூப்பில் தான் ஆடிய நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. அடுத்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா முன்னேறி உள்ளது.
சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற கடினமான அணிகளை இந்தியா சந்திக்க உள்ளது. அந்தப் போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற உள்ளது. அங்கு உள்ள மைதானங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, இந்திய அணியில் கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளரை சேர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அமெரிக்காவில் நடந்த குரூப் போட்டிகளில் இந்திய அணி பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் என மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களுடன் நான்காவது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியாவை பயன்படுத்தி இருந்தது. ஆனால், தற்போது சூப்பர் 8 சுற்றில் வேகப் பந்துச்சாளர்களில் ஒருவரை நீக்கி விட்டு சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

அதே சமயம், போட்டி சூழ்நிலைக்கு ஏற்ப அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மொத்தமாக 12 ஓவர்களை வீச தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை சில பிட்ச்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லாமல் மாறலாம். போட்டியின் இடையே நடக்கும் இது போன்ற மாற்றங்களை சமாளிக்க இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்களையும் அணியில் வைத்திருக்க வேண்டும்.
இந்த நிலையில் தான் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைவலியை போக்கி இருக்கிறார். கடந்த 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது. ஆனால், 2024 டி20 உலகக் கோப்பையில் இதுவரை அவர் ஆடிய போட்டிகளில் மிக துல்லியமாக பந்து வீசி இருந்தார்.
குறிப்பாக அவர் ஷார்ட் பிட்ச் ஆக பந்து வீசினாலும் கூட, அதை சரியாக விக்கெட்டுக்கு நேரான லென்த்தில் வீசுகிறார். அதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் தடுமாறுகிறார்கள். அதனால், அவருக்கு எளிதாக விக்கெட் கிடைக்கிறது. குரூப் சுற்றில் நியூயார்க் பிட்ச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். கிட்டத்தட்ட அதே போன்ற பிட்ச்களே வெஸ்ட் இண்டீஸ்-இல் இருக்கும். ஒரு சில மைதானங்களில் மட்டுமே பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்கள் இருக்கும்.
எனவே, ஹர்திக் பாண்டியா நிச்சயமாக நான்கு ஓவர்களையும் வீசுவார் என்பதோடு விக்கெட்களையும் வீழ்த்தும் ஆற்றல் கொண்டவராக இருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. எனவே, அவரை நம்பி மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களில் முகமது சிராஜை நீக்க கேப்டன் ரோஹித் சர்மா முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன் மூலம் அணியில், பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா என மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். சுழற் பந்துவீச்சில் குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார்கள்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் முதல் இடத்தில் உள்ளனர். இருவருமே மூன்று போட்டிகளில் பங்கேற்று தலா 7 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளனர்.