மும்பை : இந்திய கிரிக்கெட்டுக்கு உயிர் கொடுத்த ஒரு கிரிக்கெட் தொடர் என்றால் அது 2007 டி20 உலகக் கோப்பை தான். 2007 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இந்தியா குரூப் சுற்றுடன் வெளியேறி மிக மோசமான நிலையில் இருந்தது. பயிற்சியாளர் கிரேக் சேப்பல் செய்த குளறுபடிகளால் இந்திய அணி சின்னாபின்னமாகி இருந்தது. இனி இந்திய அணியின் எதிர்காலம் என்னவாகும் என அனைவரும் எண்ணிய போது 2007 டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றது.
மூத்த வீரர்களான சச்சின், ராகுல் டிராவிட் போன்றோர் ஒதுங்கிக் கொண்டனர். சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், அஜித் அகர்கர் போன்ற அனுபவ வீரர்களுடன் இளம் வீரர்கள் அடங்கிய அணியை பிசிசிஐ தேர்வு செய்தது. அந்த அணிக்கு தோனியை கேப்டனாக நியமித்து யாரும் எதிர்பாராத ஒரு விஷயத்தை செய்தது பிசிசிஐ. அதற்கு காரணம் அப்போது டி20 உலக கோப்பையை யாரும் அவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. டி20 என்ற கிரிக்கெட் போட்டியே நடைமுறையில் வெற்றி பெறாது, ரசிகர்களை ஈர்க்காது என்ற மனநிலையில் மூத்த வீரர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் 2007 டி20 உலக கோப்பையில் முதல் குரூப் சுற்றில் இந்திய அணி ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக முதல் போட்டியில் பங்கேற்க இருந்தது. ஆனால் மழையின் காரணமாக அந்த போட்டி நடக்கவில்லை, அடுத்து பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதியது மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் இரண்டு அணிகளும் 20 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது. இதை எடுத்து அப்போது இருந்த விதியின்படி பவுல் அவுட் நடத்தப்பட்டது. அதில் இந்தியா வென்றது.
அடுத்து இரண்டாவது குரூப் சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரை இறுதியில் அனுபவ வீரர்களைக் கொண்ட ஆஸ்திரேலியா அணியை இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வீழ்த்தியது. அதுவரை இந்திய அணி நம்பிக்கை இன்றி இருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மேலும், இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணியும் முன்னேறியதால் பரபரப்பு உச்சதுக்கு சென்றது. அடுத்து இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் கடைசி பந்தில் இந்தியா வெற்றி பெற்றது. முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற மூன்று முக்கிய வீரர்கள் காரணம். முதலில் கேப்டன் தோனி. அவர் இந்த தொடரில் பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும் கேப்டன்சியில் முத்திரை பதித்தார். எந்த கிரிக்கெட் கேப்டனும் செய்யத் தயங்கும் சில முடிவுகளை அவர் அதிரடியாக எடுத்தார். அது இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்று தந்தது.
அடுத்து இந்த தொடர் முழுவதும் நிலையாக ஆடிய ஒரே இந்திய வீரர் கவுதம் கம்பீர் மட்டுமே. அவர் ஆறு இன்னிங்ஸ்களில் 227 ரன்கள் எடுத்தார். அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். அவர் மூன்று அரைசதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக இந்திய அணி வெற்றிகளை பெற்றது.
மூன்றாவது யுவராஜ் சிங். அவர் இந்த தொடரில் 5 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் அவர் ஆடிய ஆட்டம் கிரிக்கெட் உலகையே வியக்க வைத்தது. முதலாவது இங்கிலாந்து அணிக்கு எதிராக குரூப் சுற்றில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்து கிரிக்கெட் உலகை மிரட்டினார். அந்தப் போட்டியில் 16 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். அதன்மூலம் டி20 கிரிக்கெட் என்றால் என்ன என்பதை அவர் அடையாளப்படுத்தினார்.
அடுத்து வெற்றி பெற்றே ஆக வேண்டிய அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் 30 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். அவரது அதிரடி ஆட்டத்தை நிறுத்த முடியாமல் ஆஸ்திரேலியா அணியின் அனுபவ பந்துவீச்சாளர்கள் திணறினர். அவர் இந்த தொடரில் 195 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து இருந்தார். இந்த மூன்று வீரர்களால் இந்திய அணி முதல் டி20 உலக கோப்பையை வென்றது.