பார்படோஸ்: 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது. அடுத்து இந்திய அணி சூப்பர் 8 சுற்று போட்டிகளில் விளையாட உள்ளது.
இனி இந்திய அணி ஆட உள்ள போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸ்-இல் தான் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் நிலவும் என்பதால் இந்திய அணி "குல்ச்சா"-வை களம் இறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சுழற் பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரையும் சேர்த்து "குல்ச்சா" என அழைப்பதுண்டு. இவர்கள் இருவரும் ஜோடியாக இந்திய அணியில் பந்து வீசியபோது அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. பலமுறை இவர்கள் இருவரும் சேர்ந்து எதிரணிகளை திக்கு முக்காட வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்களை சேர்த்து குல்ச்சா என அழைக்கிறார்கள் ரசிகர்கள்.
2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இவர்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்ட போதும் இதுவரை நடந்த குரூப் சுற்றுப் போட்டிகளில் பிளேயிங் லெவனில் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களுக்கு பதிலாக சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேலுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ்-இல் இதற்கு முன் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் குல்தீப் யாதவ் 13 போட்டிகளில் 23 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 21.3 ஆக உள்ளது. அதாவது அவர் 21.3 பந்துகளுக்கு ஒருமுறை விக்கெட் வீழ்த்தியுள்ளார். யுஸ்வேந்திர சாஹல் 7 போட்டிகளில் 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 20 ஆக உள்ளது.
அதே சமயம் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல்-இன் செயல்பாடு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மோசமாக இருந்துள்ளது. ரவீந்திர ஜடேஜா அங்கு 27 போட்டிகளில் 33 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 48 ஆக உள்ளது. அக்சர் பட்டேல் 7 போட்டிகளில் 4 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 60 ஆக உள்ளது.
இந்த செயல்பாட்டின் அடிப்படையில் குறைந்த பந்துகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தும் ஆற்றல் கொண்ட குல்தீப் யாதவ் மற்றும் சாஹலை அணியில் சேர்க்க பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் இருவரையும் அணியில் சேர்த்தால், எந்தெந்த வீரர்களை நீக்குவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.