பார்படோஸ்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் பங்கேற்க உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் அணியில் 9 வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதாகவும், அவர்கள் இந்திய வீரர்களை பற்றி மற்றவர்களுக்கு சொல்வார்கள் எனவும் அவர் கூறினார். அதன் மூலம் இந்திய அணியின் பலவீனத்தை ஆப்கானிஸ்தான் அணி தெளிவாக தெரிந்து திட்டமிட்டு இந்த போட்டியில் விளையாடும் என்பதை சுட்டி காட்டினார். அதே போல, இந்திய வீரர்களும் ஆப்கானிஸ்தான் வீரர்களை பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த போட்டி நடைபெற உள்ள நேரம் ஆப்கானிஸ்தான் அணிக்கு சாதகமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார். பொதுவாக இந்திய அணி இரவு நேரங்களில் நடக்கும் போட்டிகளில் தான் அதிகம் விளையாடி உள்ளது. அது போன்ற போட்டிகளில் ஈரப்பதம் இருக்கும் என்பதால் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்காது.
ஆனால், இந்த போட்டி வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, நிச்சயமாக சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் எனவும், ஆப்கானிஸ்தான் அணி அனுபவம் வாய்ந்த சுழற் பந்துவீச்சை கொண்ட அணி என்பதால் அதை நிச்சயம் இந்திய அணிக்கு எதிராக பயன்படுத்தும் எனவும் ஜொனாதன் ட்ராட் சுட்டிக் காட்டினார்.
இது பற்றி ஜொனாதன் ட்ராட் பேசுகையில், "எங்களிடம் ஐபிஎல் தொடரில் விளையாடும் 9, 10 வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் இந்திய வீரர்களை பற்றிய தங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்வார்கள். இந்திய வீரர்களும் அதே போல எங்கள் வீரர்களை பற்றி தெரிந்தே வைத்திருப்பார்கள்." என்றார்.
மேலும், "பகல் நேரத்தில் நடக்கும் போட்டி எங்களுக்கு சாதகமானது. அது எங்களுக்கு பொருந்தி போகும். எனவே, இந்திய அணிக்கு எதிராக பகல் நேரத்தில் விளையாட நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இந்திய அணி நிச்சயம் நல்ல அணிதான். அந்த அணியே வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. அதுவே அவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும். நாங்கள் பின்தங்கிய அணியாகவே பார்க்கப்படுகிறோம். எங்கள் மனதில் நாங்கள் பின்தங்கியவர்கள் அல்ல. நாங்கள் முழு அளவில் தயாராக இருக்கிறோம்." என்றார்.
மேலும், "எங்கள் அணியில் டி20 கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்கள் உள்ளனர். மேலும், இந்த உலகக் கோப்பையில் எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தான் (ஃபாசல்ஹக் ஃபரூக்கி) அதிக விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் பந்து வீச்சில் எந்த சூழ்நிலையிலும் விக்கெட் எடுக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறோம். போட்டி சூழ்நிலை வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் நாங்கள் விக்கெட் வீழ்த்துவோம். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் நாங்கள் விக்கெட் வீழ்த்துவோம்" என்றார் ஜொனாதன் ட்ராட்.