பார்படோஸ்: இந்திய டி20 அணியில் இருந்து முகமது சிராஜ் நீக்கப்பட்டார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார்.
முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது அதில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்றனர். பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் என மூவர் மட்டுமே இடம் பெற்றனர். இவர்களில் பும்ரா மற்றும் முகமது சிராஜ் மட்டுமே சர்வதேச அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருந்தனர்.

அர்ஷ்தீப் சிங் 2023 மற்றும் 2024 ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதால் அவர் மீது நம்பிக்கை இருந்தது. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் அர்ஷ்தீப் சிங் அபாரமாக செயல்பட்டார். ஆனால் முகமது சிராஜ் விக்கெட் வீழ்த்தவில்லை. மேலும் அதிக ரன்களையும் விட்டுக் கொடுத்தார். அவர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இதை அடுத்து சூப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் முகமது சிராஜுக்கு வாய்ப்பு கிடைக்காது என கூறப்பட்டது. சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் அனைத்துமே வெஸ்ட் இன்டீஸில் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கின்றன. எனவே, இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை அணியில் சேர்க்க முடிவு செய்தார் கேப்டன் ரோஹித் சர்மா.
பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் முகமது சிராஜை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கினார் கேப்டன் ரோஹித் சர்மா. இதன் மூலம் 25 வயதான அர்ஷ்தீப் சிங்கிற்கு இனி வரும் அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் ஆடும் அரிய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அவர் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா முதல் இடத்தில் உள்ளனர். இருவருமே தலா ஏழு விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் 11 : ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா