செயின்ட் லூசியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ள சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவு போட்டிக்கான பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என பிட்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2024 டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ்-இல் உள்ள ஆடுகளங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி செயின்ட் லூசியா நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை நடந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பேட்டிங் செய்ய சாதகமான சூழ்நிலை நிலவியது.

இந்த மைதானத்தில் இதுவரை நடந்த போட்டிகளில் பேட்டிங் செய்யும்போது ஒரு ஓவருக்கு சராசரியாக 8.92 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவருக்கு சராசரியாக 180 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பேட்ஸ்மேன் சராசரியாக 28.76 ரன்கள் குவித்துள்ளார்.
அதே போல இந்த மைதானத்தில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு சராசரியாக 9.42 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர். அதே சமயம், சுழற் பந்துவீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு 7.91 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளனர். அந்த வகையில் பார்த்தால் இந்த பிட்ச்சில் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான அம்சம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய அணி சூப்பர் 8 போட்டிகளில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது. ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் என மூன்று திறமையான சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருப்பதால் இந்த பிட்ச் இந்திய அணிக்கு சாதகமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. அதே போல, இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த பிட்ச்சின் தன்மையை பயன்படுத்தி 200 ரன்கள் குவிக்க முயற்சிக்க வேண்டும்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாது என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணியைப் பொறுத்தவரை தோல்வி அடைந்தாலும் அதிக வித்தியாசத்தில் தோல்வி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நடந்தால் நெட் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறி விடும்.