செயின்ட் லூசியா: 2024 டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை வீழ்த்தினால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது. மறுபுறம், இந்திய அணி குறைந்த வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் அரை இறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றிலிருந்து இதுவரை இந்தியா ஆடிய ஐந்து போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் குரூப் சுற்றில் ஆடினார். அதன் பின் சூப்பர் 8 சுற்றில் அவரை நீக்கி விட்டு சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற்றார்.

இதைத் தவிர அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் முக்கியமான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா ரிஸ்க் எடுத்து அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜாவை நீக்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரவீந்திர ஜடேஜா இதுவரை நடந்த ஐந்து போட்டிகளிலும் எந்த விதத்திலும் அணிக்கு உதவியாக ஆடவில்லை. ஆல் ரவுண்டரான அவரை ஏழாவது வரிசையில் பேட்டிங் இறக்கக் கூட கேப்டன் ரோஹித் சர்மா தயங்குகிறார். அவரால் ரன் குவிக்க முடியுமா? என்ற சந்தேகமே இதற்கு காரணம்.
மேலும், பந்துவீச்சிலும் ஜடேஜாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி நடைபெற உள்ள செயின்ட் லூசியா மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரவீந்திர ஜடேஜாவை நீக்கிவிட்டு மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான சாஹலை அணியில் சேர்க்க வேண்டும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எனினும், கேப்டன் ரோஹித் சர்மா அணியை மாற்ற மாட்டார் என்பதே அவரைப் பற்றி அறிந்த முன்னாள் வீரர்கள் கருத்தாக உள்ளது. ஏனெனில், உலகக் கோப்பை போன்ற நீண்ட தொடர்களில் தொடர்ந்து 11 வீரர்கள் கொண்ட ஒரே அணியுடன் பயணிப்பது சிறந்த முடிவாக இருக்கும். தேவைக்கேற்ப வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற் பந்துவீச்சாளர்களிடையே மாற்றம் செய்து கொள்ளலாம். அதை மட்டும் தான் இந்திய அணி இதுவரை செய்துள்ளது.
எனவே, ஜடேஜாவை நீக்க வாய்ப்பு குறைவுதான். மற்றபடி இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது. சிலர் சிவம் துபேவை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை களம் இருக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். கடந்த போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக 24 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார் சிவம் துபே. அதனால், அவரையும் அணியை விட்டு நீக்க வாய்ப்பு இல்லை.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்க உள்ள இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா