செண்ட் லூசியா : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா படைத்துள்ளார். 2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக்கோப்பை முதல் தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர் விளையாடிய 2 வீரர்களில் ரோகித் சர்மாவும் ஒருவர்.
இம்முறை இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மிரட்டலாக ஆடி வருகிறார். இந்த நிலையில் சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

முதல் 2 ஓவர்களில் ரோகித் சர்மா நிதானம் காத்த நிலையில், மிட்சல் ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் 6,6,4,6,6 என்று மொத்தமாக 29 ரன்களை விளாசினார். மிட்சல் ஸ்டார்க் வாழ்க்கையில் ஒரே ஓவரில் இவ்வளவு ரன்களை விட்டுக் கொடுத்ததில்லை. ரோகித் சர்மா ருத்ரதாண்டவத்தை வெளிப்படுத்த, அதன்பின் கம்மின்ஸ் சிக்கினார். கம்மின்ஸ் வீசிய முதல் பந்திலேயே ரோகித் சர்மா அபார சிக்சரை ஒன்றை விளாசி அசத்தினார்.
அந்த சிக்சர் 100 மீட்டர் தூரம் சென்று விழுந்தது. இந்த சிக்சரை விளாசியதன் மூலமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். 150 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 200 சிக்சரை விளாசி அசத்தியுள்ளார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 19 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு பின் ரோகித் சர்மா இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 2வது முறையாக அரைசதத்தை எட்டியுள்ளார். மேலும் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்க, தொடர்ந்து நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் 118 இன்னிங்ஸ்களில் விளையாடி 173 சிக்சர்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
இதன்பின் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் 113 இன்னிங்ஸ்களில் விளையாடி 137 சிக்சர் விளாசி 3வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் 103 இன்னிங்ஸ்களில் விளையாடி 133 சிக்சர்களுடன் 4வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரன் 87 இன்னிங்ஸ்களில் 132 சிக்சர்களை விளாசி 5வது இடத்தில் உள்ளனர்.