செயின்ட் லூசியா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகளே மீதம் உள்ளன. இந்த நிலையில், எந்த நான்கு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பது குறித்து பார்க்கலாம். சூப்பர் 8 சுற்றில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் இரண்டாவது பிரிவில் அனைத்து போட்டிகளும் நடந்து முடிந்துள்ளன. அதன் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி ஆறு புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், இங்கிலாந்து அணி 4 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளன.
தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அந்த வகையில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்தியா இடம் பெற்றுள்ள முதல் பிரிவில் இன்னும் இரண்டு போட்டிகள் நடக்க உள்ளன. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையான போட்டியும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியும் நடைபெற உள்ளன.

இதில் இந்திய அணி சிறிய வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தாலும் அரை இறுதிக்கு முன்னேறிவிடும். அந்த வகையில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேற 96.6 சதவீத வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அடுத்து ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை வீழ்த்தினால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும். அதிலும் அந்த அணி இந்திய அணியை வீழ்த்தி நான்கு புள்ளிகளை பெறுவதோடு, ஆப்கானிஸ்தான் அணியை விட அதிக நெட் ரன் ரேட் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த வகையில் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேற 57.3 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அந்த அணி வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும். அடுத்து ஆஸ்திரேலியாவை விட அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலியா, இந்தியாவிடம் வீழ்ந்தால் ஆப்கானிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தினாலே போதுமானது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேற 37.5 சதவீத வாய்ப்பு உள்ளது.
வங்கதேச அணி கிட்டத்தட்ட அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியா, இந்தியாவிடம் தோல்வி அடைய வேண்டும். வங்கதேசம், ஆப்கானிஸ்தானை மிகப் பெரிய வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். பின்னர் ஆஸ்திரேலிய அணியை விட அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும். அப்போது தான் அரை இறுதிக்கு முன்னேற முடியும். ஆனால், அது கடினமாகவே கருதப்படுகிறது. வங்கதேச அணியின் நெட் ரன் ரேட் மிகக் குறைவாக இருக்கிறது. அந்த வகையில் வங்கதேச அணிக்கு 8.6 சதவீதம் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அரை இறுதிக்கு முன்னேறி விட்டன. இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியதாக எடுத்துக் கொள்ளலாம். ஆஸ்திரேலியா அல்லது ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளில் ஒரு அணி அரை இறுதிக்கு முன்னேறும்.