செயின்ட் லூசியா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியின் முடிவில் எந்த அணிகள் அரை இறுதிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் 8 சுற்றில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அதில் இரண்டாவது பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி விட்டன. அடுத்து முதல் பிரிவில் இந்திய அணி தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

தற்போது நான்காவது அணியாக அரை இறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடையே போட்டி நிலவி வருகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டியில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்று இரண்டு புள்ளிகள் உடன் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் -0.331 என்பதாக உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியுடன் இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் -0.65 ஆக உள்ளது. வங்கதேச அணி இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் தோல்வி அடைந்து இருக்கிறது. தற்போது வங்கதேச அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் கடைசி சூப்பர் 8 போட்டியில் மோத உள்ளது.
அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை வங்கதேசம் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கு முன்னேறும். எனவே, தற்போது ஆஸ்திரேலிய அணி, வங்கதேச அணியின் வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளது.
இந்திய அணியின் வெற்றியால் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு வகையில் நன்மை நடந்துள்ளது. ஏனெனில், ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி இருந்தால் 4 புள்ளிகளும் பெற்று, கூடுதல் நெட் ரன் ரேட்டும் பெற்று இருக்கும். அந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேச அணியை வீழ்த்தினாலும் கூட அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கும். தற்போது அந்த சிக்கல் இல்லை. வங்கதேசத்தை வீழ்த்தினாலே ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறிவிடும். எனவே, இந்திய அணி ஒரு வகையில் ஆப்கானிஸ்தானுக்கு உதவி இருக்கிறது.