செயின்ட் லூசியா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த போட்டி ஜூன் 24 அன்று செயின்ட் லூசியா மைதான நேரப்படி காலை 10:30 மணிக்கு நடைபெறும்.
அதற்கு முன்பு 7 மணி முதல் போட்டி துவங்கும் நேரம் வரை 50 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. காலை 7 முதல் 10 மணி வரை 50 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. போட்டி துவங்கும் நேரம் முதல் போட்டி முடியும் வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு 32 சதவீதம் என்ற அளவுக்கு இருப்பதாக வானிலை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

எனவே, போட்டி நேரத்தில் சில நிமிடங்கள் மழை பெய்யலாம். அதேபோல போட்டிக்கு முன்பு மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. அப்படி மழை பெய்தால் மைதானத்தில் மழை நீர் தேங்கக் கூடும். இதே உலகக் கோப்பை தொடரில் இதற்கு முன் மூன்று போட்டிகள் ஆடுகளத்தில் மழை நீர் தேங்கியதால் கைவிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இக்கட்டான நிலையில் இருக்கிறது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலிய அணியின் அரை இறுதி வாய்ப்பு பறிபோகும். ஒருவேளை போட்டி மழையால் கைவிடப்பட்டாலும் ஆஸ்திரேலியா அணிக்கு சிக்கல் ஆகிவிடும். எனவே, மழை பெய்யாமல் இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமான அம்சமாக இருக்கும்.
இந்த மைதானம் பொதுவாக பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். ஒருவேளை மழை பெய்தால் அடுத்த சில நிமிடங்களுக்கு ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதமாக மாறலாம். அதை மனதில் வைத்து இந்திய அணி தனது திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.