ஆன்டிகுவா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அவரால் தான் இந்திய அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது.
இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் தான் பவுலிங்கில் பயன்படுத்திய திட்டம் குறித்து விவரித்தார். மேலும் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் காயத்தால் விளையாட முடியாமல் போனது குறித்து பேசிய போது கடவுள் தனக்கு வேறு திட்டத்தை வைத்து இருந்ததாக கூறினார். அதன் பின் ராகுல் டிராவிட் தான் மீண்டும் அணியில் இடம் பெற்றது குறித்து என்ன சொன்னார்? என்பது குறித்தும் மனம் திறந்து பேசினார்.

"நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். அது மட்டும் இன்றி நாங்கள் ஒற்றுமையாக இருந்து எங்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்தப் போட்டியில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் காற்றை பயன்படுத்தி அதே திசையில் பந்தை அடிக்க முயன்றார்கள். ஆனால், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று நான் நினைத்தேன். நாம் எப்போதும் பேட்ஸ்மேனை விட ஒரு படி முன்னே இருக்க வேண்டும்" என்றார் ஹர்திக் பாண்டியா.
அடுத்து இந்திய அணிக்காக விளையாடுவது குறித்து பேசிய அவர், "இந்த நாட்டுக்காக விளையாடுவதற்கு நான் பெரிய பாக்கியசாலியாக இருக்க வேண்டும். 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின் போது எனக்கு மோசமான காயம் ஏற்பட்டது. அதில் இருந்து உடனே மீண்டு வந்து விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கடவுள் வேறு திட்டங்களை வைத்திருந்தார். சில நாட்கள் முன்பு நான் ராகுல் டிராவிட்-இடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர், "கடினமாக உழைக்கும் மக்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும். நீண்ட நாளாகவே அதிர்ஷ்டம் உன்னுடன் இருக்கிறது" என்றார்" இவ்வாறு ஹர்திக் பாண்டியா பேசினார்.