நார்த் சவுன்ட்: 2024 டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் இடம் பெற்று இருக்கும் இந்திய அணி இதுவரை தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் முதல் பிரிவின் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் இந்தியா. ஆஸ்திரேலியா வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை இந்திய அணி வீழ்த்தி உள்ளது. அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் வென்றால் இந்திய அணி 100 சதவீதம் உறுதியாக அரை இறுதிக்கு முன்னேறும்.

ஒருவேளை ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தால் இந்திய அணியின் நெட் ரன் ரேட் அதிகமாக இருப்பதால் அரை இறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் இந்திய அணி நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறி விடும்.
எனவே, இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை அந்த அணி வங்கதேச அணியை வீழ்த்தி இரண்டு புள்ளிகளுடன் உள்ளது. அடுத்து ஆப்கானிஸ்தான் அணி மற்றும் இந்திய அணியை சந்திக்க உள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றாலும் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.