ஆன்டிகுவா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய போட்டியின் போது ரிஷப் பண்ட் ஆடிய ஷாட் ஒன்றை பார்த்து பொறுமை இழந்தார் விராட் கோலி. ரிஷப் பண்ட் மோசமான ஷாட் ஆடி கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ரிஷப் பண்ட் ஆடுகளத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவரை நோக்கி சென்ற விராட் கோலி, அவரை கண்டித்தார். ரிஷப் பண்ட் அதற்கு பதில் அளித்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ரோஹித் சர்மா 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம் ஆடினர். விராட் கோலி 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்தார். அவருக்கு பின் வந்த சூர்யகுமார் இரண்டு பந்துகளில் ஆறு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

மூன்று விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் ரிஷப் பண்ட் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். அவரும் அவ்வப்போது பவுண்டரி அடித்து நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி வந்தார். இந்த நிலையில் 12வது ஓவரில் சுழற் பந்துவீச்சாளர் ரிஷாத் ஹுசைன் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்றார் ரிஷப் பண்ட்.
ஆனால், அந்த பந்து கேட்ச் பிடிக்கப்பட்டது. தான் தவறான ஷாட் ஆடியதாக ரிஷப் பண்ட் ஏமாற்றத்துடன் தன்னைத்தானே திட்டிக்கொண்டு வெளியேறினார். அதே சமயம் வெளியில அமர்ந்திருந்த விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆடிய ஷாட் தவறானது என தன் கோபத்தை வெளிப்படுத்தி அமைதி யாலந்து காணப்பட்டார். ரிஷப் பண்ட் ஆடுகளத்தை விட்டு வெளியே வந்தவுடன் பொறுமை இழந்த விராட் கோலி, எழுந்து நேராக அவரிடம் சென்று, "இந்த ஷாட்டை நீ ஆடி இருக்கக் கூடாது" என அவரை கண்டிக்கும் வகையில் பேசினார். அதற்கு ரிஷப் பண்ட் பதில் அளித்தார்.
இந்த காட்சிகள் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. பின்னர் இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.