"இனியும் இவரை நம்புவது வேஸ்ட்".. பயற்சிப் போட்டியில் கேப்டன் செய்த சொதப்பல்.. ரசிகர்கள் சோகம்
நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி பயிற்சி போட்டியில் பங்கேற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா மோசமாக விளையாடி ஆட்டமிழந்தார். அவர் 19 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அவர் பல பந்துகளை அடிக்க முடியாமல் திணறினார். இதை அடுத்து அவர் ஃபார்ம் இழந்து விட்டதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். சஞ்சு சம்சன் ஆறு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார். அவர் அதிரடியாக பவுண்டரி அடிக்கத் துவங்கினார்.

ஆனால், அப்போதும் ரோஹித் சர்மா சுழற் பந்து வீச்சில் ரன் குவிக்க முடியாமல் தடுமாறினார். அவரால் டைமிங் செய்து பந்துகளை அடிக்க முடியவில்லை. இரண்டு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார். பின்னர் 19 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
முன்னதாக 2024 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அபாரமாக ரன் குவித்த ரோஹித் சர்மா, இரண்டாம் பாதியில் ரன் குவிக்க முடியாமல் திணறினார். அவர் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டாரா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. எனினும், டி20 உலகக் கோப்பையின் போது அவர் முழு ஃபார்முக்கு வந்து விடுவார் என ரசிகர்கள் நம்பினர்.
ஆனால், வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலேயே அவர் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி இருப்பது இந்திய ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளது. பலரும் சமூக வலை தளங்களில், "ரோஹித் சர்மாவை இனி நம்ப முடியாது. அவர் இந்த உலகக் கோப்பையில் பெரிய அளவில் ரன் குவிக்க மாட்டார்" என கூறி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications