கயானா: இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 39 பந்துகளில் 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 47 ரன்களும் விளாசினர்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது அரையிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் இந்திய அணி சார்பாக களமிறங்கிய ரோகித் சர்மா - விராட் கோலி இருவரும் முதல் 2 ஓவர்கள் நிதானம் காத்தனர். இதன்பின் டாப்லீ வீசிய 3வது ஓவரில் அபாரமாக ஒரு சிக்சரை விளாசிய விராட் கோலி, அந்த ஓவரின் 3வது பந்திலேயே பவுன்ஸை கணிக்காமல் போல்டாகி 9 ரன்களில் வெளியேறினார்.

இதன்பின் பொறுப்பை எடுத்துக் கொண்டு ரோகித் சர்மா தேவைக்கேற்ப பவுண்டரிகளை விளாசி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 40 ரன்களை சேர்த்திருந்தது. பவர் பிளேவின் கடைசி ஓவரை அட்டாக் செய்ய முயன்ற ரிஷப் பண்ட், 4 ரன்களில் பரிதாபமாக வெளியேறினார். இதன்பின் சூர்யகுமார் யாதவ் - ரோகித் சர்மா கூட்டணி இணைந்தது. என்ன நடந்தாலும் அட்டாக்கை நிறுத்த கூடாது என்ற முடிவுடன் இருந்த ரோகித் சர்மா பவுண்டரிகளாக விளாசி தள்ளினார்.
மறுமுனையில் ஜோர்டன் வீசிய 8வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் அபாரமாக ஒரு சிக்சரை விளாச, 8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 65 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட, ஒரு மணி நேரத்திற்கு பின் ஆட்டம் தொடங்கியது. பின்னர் ஸ்பின்னர்களை கொண்டு இங்கிலாந்து கேப்டன் பட்லர் அட்டாக் செய்தார். இதனால் அதிகளவில் டாட் பால்களை வீசி இந்திய அணிக்கு அழுத்தத்தை கொடுத்தனர். இதனிடையே சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா சிக்சர் அடித்து அரைசதத்தை எட்டினார்.
12.3 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடக்க, ரோகித் சர்மா அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றினார். ஆனால் அடில் ரஷித் பவுலிங்கில் தாழ்வாக பந்தை கணிக்க தவறிய ரோகித் சர்மா 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெளியேற, உடனடியாக ஹர்திக் பாண்டியா களமிறக்கப்பட்டார். இதன்பின் சூர்யகுமார் யாதவும் 47 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 132 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் ஃபினிஷிங் செய்யும் பொறுப்பு ஹர்திக் - ஜடேஜா கைகளுக்கு வந்தது.
ஆனால் ஜோர்டன் வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா, மீண்டும் சிக்சர் அடிக்க முயற்சித்து 23 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த சிவம் துபே முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, அக்சர் படேல் களம் புகுந்தார். பின்னர் ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரிகள் உட்பட 12 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரை வீச ஜோர்டன் அழைக்கப்பட்டார். இந்த ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது.