IND vs ENG: எல்லை மீறிப் போய்கிட்டு இருக்கு.. இவரை உடனே டீமை விட்டு தூக்குங்க.. கோலி ஏமாற்றம்
கயானா: இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி படுமோசமாக 9 பந்துகளில் 9 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். ஏற்கனவே, அவர் இந்த தொடரில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அரை இறுதிப் போட்டியிலும் இந்திய அணியை கைவிட்டார். இதை அடுத்து அவரை இத்துடன் டி20 அணியில் இருந்து ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி வருகின்றனர்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி கயானாவில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி துவக்கம் அளித்தனர். இந்த போட்டிக்கு முன் விராட் கோலி 6 இன்னிங்ஸ்களில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். ஒரு போட்டியில் மட்டுமே அவரது ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ தாண்டி இருந்தது. அந்த அளவுக்கு மோசமாக ஃபார்ம் அவுட் ஆன வீரர் போல அவர் ஆடி இருந்தார்.

எனினும், அரை இறுதிப் போட்டிகள் போன்ற நாக் அவுட் போட்டிகளில் விராட் கோலி அபாரமாக செயல்படுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. இதற்கு முன் 2014, 2016 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பை தொடர்களின் அரை இறுதிப் போட்டிகளில் கோலி அரைசதம் அடித்து இருக்கிறார். மூன்று அரை இறுதிகளிலும் மூன்று அரை சதம் அடித்து இருந்ததால் அவர் இந்த முறையும் அரை சதம் அடிப்பார் என கோலியின் ரசிகர்கள் நம்பினர்.
ஆனால், அவர் 9 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார். தற்போது அவர் 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 10.71 மட்டுமே. அவரது சராசரி ஸ்ட்ரைக் ரேட் 100 மட்டுமே. இந்த உலகக்கோப்பையில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இடம் பெற்றுள்ள முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் விராட் கோலி மட்டுமே மிக மோசமாக செயல்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவம் துபேவை சரியாக பேட்டிங் ஆடவில்லை என்ற விமர்சனம் இருக்கும் நிலையில், அவர் 106 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 26.5 ஆகும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 107 ஆக, குறைவாக இருக்கிறது என்றாலும் அவர் ஓரளவு ரன் குவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் மூத்த வீரரான விராட் கோலியை இனி இந்திய டி20 அணியில் இருந்தே ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என ரசிகர்கள் பொங்கி வருகின்றனர். இந்த அரை இறுதிப் போட்டியில் மூன்றாவது ஓவரில் விராட் கோலி ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 5.2 ஓவர்களில் 40 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. ரோஹித் சர்மா மட்டுமே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார்.


Click it and Unblock the Notifications