கயானா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மழை பெய்ததால் திட்டமிட்ட நேரப்படி போட்டி துவங்கவில்லை. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்க வேண்டிய இந்தப் போட்டி 9.15 க்கு தான் துவங்கியது. பின்னர் இந்திய அணி 8 ஓவர்களில் 65 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் போட்டி மழையால் மீண்டும் தடைபட்டது.
சுமார் ஒரு மணி நேரம் போட்டி தடைபட்ட நிலையில் மீண்டும் 11.10க்கு போட்டி தொடங்கியது. ஓவர்கள் ஏதும் குறைக்கப்படவில்லை. இந்தப் போட்டியை நடத்தி முடிக்க இந்திய நேரப்படி வெள்ளிக் கிழமை அதிகாலை 4 மணி வரை கூடுதல் நேரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியின் இடையே மழை பெய்து, போட்டி கைவிடப்படவும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் எந்த அணி வெற்றி பெறும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின. கயானாவில் நடைபெறும் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கும், கயானா நேரப்படி காலை 10:30 மணிக்கும் இந்த போட்டி துவங்கி இருக்க வேண்டும்.

ஆனால், போட்டி நேரத்துக்கு முன்பும், டாஸ் போடும் நேரத்திலும் மழை பெய்ததால் டாஸ் போடப்படவில்லை. திட்டமிட்டபடி போட்டி துவங்கவில்லை. சுமார் 1.15 மணி நேரம் தாமதமாக போட்டி துவங்கியது. போட்டியின் இடையே மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. இது அரை இறுதிப் போட்டி என்பதால் இந்தப் போட்டிக்கு 250 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பார்த்தால் இந்திய நேரப்படி மறுநாள் விடியற்காலை 4 மணி வரை போட்டியை நடத்த முடியும். இத்தனை கூடுதல் நேரம் இருப்பதால் போட்டியை ஓவர்கள் குறைத்தாவது நடத்தி விட வாய்ப்பு உள்ளது. அதிலும் ஒரு விதி உள்ளது. அதாவது இரண்டு அணிகளும் குறைந்தபட்சம் தலா 10 ஓவர்கள் பேட்டிங் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் முடிவை அறிவிக்க முடியும். எனவே, குறைந்தபட்சம் 10 ஓவர் போட்டியாகவாது இந்த அரை இறுதி போட்டி நடத்தப்பட வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது.
ஒருவேளை மழையின் காரணமாக 10 ஓவர் போட்டியையும் நடத்த முடியாமல் போனால், இந்த போட்டி கைவிடப்படும். அப்போது சூப்பர் 8 சுற்றில் தங்கள் பிரிவில் எந்த அணி முதல் இடத்தில் இருந்ததோ, அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் இந்திய அணி முதல் இடம் பெற்றிருந்தது.
அதேபோல இரண்டாவது பிரிவில் இங்கிலாந்து இரண்டாவது இடம் பிடித்திருந்தது. அந்த வகையில் சூப்பர் 8 சுற்றில் முதல் இடம் பிடித்த இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். எனவே, போட்டி கைவிடப்படுவது என்பது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக இருக்கும். இங்கிலாந்து அணி தான் இது குறித்து பதற்றத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.