IND vs PAK: இந்தியா வெல்லும் என பணம் கட்டியவர்களுக்கு கோடிக்கணக்கில் பணமழை.. அமெரிக்கர்கள் குஷி
நியூயார்க்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 2024 டி20 உலகக் கோப்பை போட்டியை வைத்து அதிகாரப்பூர்வமாக மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடந்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடர் நடந்து வரும் அமெரிக்காவில் விளையாட்டுப் போட்டிகளை வைத்து சூதாட்டம் நடத்துவது என்பது அதிகாரப்பூர்வமான ஒன்றாகும்.
இந்தியாவில் நடக்கும் இது போன்ற சூதாட்டங்களில் எந்த அணி வெற்றி பெறும் என சூதாட முடியாது. ஆனால், அமெரிக்காவில் எந்த அணி வெற்றி பெறும்? என பணம் கட்டி சூதாடலாம். அந்த வகையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் அமெரிக்கர்கள் பலர் சூதாட்டத்தில் பணம் கட்டினார்கள்.

இணையம் முழுவதும் இந்திய அணியே வெற்றி பெறும் என பலரும் பேசி வந்ததாலும், பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணியிடம் தோல்வி அடைந்து இருந்ததாலும், பலரும் இந்திய அணி தான் வெற்றி பெறும் என பணம் கட்டினார்கள். பின்னர் போட்டியின் இடையே இந்திய அணி தோல்வி அடைவது போல சென்றதால், அப்போது பணம் கட்டுபவர்களுக்கு இந்திய அணி வென்றால் 25 மடங்கு அளவுக்கு பணம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. அப்போதும் சிலர் இந்திய அணி மீது பணம் கட்டி இருக்கிறார்கள்.
பின்னர் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் அவர்களுக்கெல்லாம் மிகப்பெரிய அளவில் பணம் குவிந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, பிரபல இசைக் கலைஞரான டிரேக் என்பவர் இதுபோன்ற சூதாட்டங்களில் அதிகம் ஈடுபடும் ஆர்வம் உள்ளவர். அவர் இந்திய அணி தான் வெற்றி பெறும் என போட்டிக்கு முன்பே 5 கோடி ரூபாய் அளவுக்கு பந்தயம் கட்டி இருக்கிறார். அதில் வெற்றி பெற்ற அவருக்கு ஏழு கோடி ரூபாய் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இவர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீது பணம் கட்டி 2 கோடி ரூபாய் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதுபோல பல அமெரிக்கர்களும் இந்திய அணி மீது பணம் கட்டி மிகப் பெரிய அளவில் லாபம் பார்த்ததாக சொல்லப்படுகிறது. இந்த போட்டியின் இடையே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மிக மோசமாக இருந்தது. குறிப்பாக இந்திய அணி பந்து வீசிக் கொண்டிருந்தபோது 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு வெறும் 8 சதவீதமாக இருந்தது. ஆனால், அங்கிருந்து பும்ராவின் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருவேளை இந்திய அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தால் சூதாட்டத்தில் பலருக்கும் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு இருக்கும்.


Click it and Unblock the Notifications