நியூயார்க் : இந்தியா - பாகிஸ்தான் டி20 உலக கோப்பை போட்டியின் முடிவில் இந்திய அணி நம்பவே முடியாத வகையில் தோல்வியின் விளிம்பில் இருந்து முன்னேறி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து இருந்தது. ஒரு கட்டத்தில் 89 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து இருந்த இந்திய அணி வேகமாக விக்கெட்களை இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தபோதும் இந்திய அணியை போலவே 12 ஓவர்களில் 72 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருந்தது. அந்த நிலையில் ரோஹித் சர்மா இந்திய வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார். அதன் பின்னர், பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை வீழ்த்தினர். இதை அடுத்து பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், "நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை எங்களுடைய பாதி இன்னிங்க்ஸின் முடிவில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால், அதன் பின் வரிசையாக விக்கெட்களை இழந்தோம். இந்த பிட்ச்சில் ஒவ்வொரு ரன்னும் முக்கியம் என்று நாங்கள் அறிவோம். இந்த பிட்ச்சில் ரன் குவிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் நாங்கள் குறைவான ஸ்கோர் எடுத்தோம். எங்கள் அணியின் பந்துவீச்சு பலமாக இருந்ததால் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என உறுதியாக இருந்தேன்" என்றார்.
மேலும், "பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தபோது பாதி இன்னிங்க்ஸின் முடிவில் நான் இந்திய வீரர்களை அழைத்து பேசினேன். அப்போது, "நமது பேட்டிங் வரிசையில் சரிவை சந்தித்தோம். அதே போல அவர்களும் பேட்டிங் வரிசையில் சரிவை சந்திப்பார்கள்" என்று கூறினேன். இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.
பின்னர் பும்ரா குறித்து பேசுகையில், "பும்ரா எப்போதும் ஒவ்வொரு போட்டியிலும் தனது பலத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் என்ன செய்வார் என நாம் அனைவருக்கும் தெரியும். அதைப்பற்றி நான் அதிகம் பேசப்போவதில்லை. அவர் இதே போன்ற மனநிலையில் உலகக் கோப்பை முழுவதும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் ஒரு அதிமேதாவி. அது நம் அனைவருக்கும் தெரியும்" இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.