நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியும் வெற்றிக்கு மிக அருகே வந்து பின்னர் பேட்டிங்கில் சொதப்பி தோல்வி அடைந்தது.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 92 சதவீதம் தோல்வி அடைந்து இருக்க வேண்டும் போட்டியின் இடையே காட்டப்படும் கணினி கணிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தியா அணிக்கு வெறும் எட்டு சதவீத வெற்றி வாய்ப்பே இருப்பதாக அந்த கணிப்புகள் காட்டின.

14வது ஓவர் வரை இந்த நிலை நீடித்தது. அப்போது இருந்த சூழ்நிலையில் இந்திய அணி எப்படியும் வெற்றி பெறாது என அனைவரும் நினைத்தனர். ஆனால், 15 வது ஓவரை வீசிய பும்ரா நிலைமையை தலை கீழாக மாற்றினார். அவர் வீசிய 15 வது முதல் பந்தில் முகமது ரிஸ்வான் பவுல்டு அவுட் ஆனார்.
அத்துடன் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு கணிப்புகளில் சடசடவென சரியத் துவங்கியது. பின்னர் இந்தப் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2022 உலகக் கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சேஸிங் செய்தபோது இதே போன்ற ஒரு இக்கட்டான நிலையில் இருந்தது.
அப்போது விராட் கோலி சேஸிங் செய்து கொண்டிருந்தார். மறுபுறம் விக்கெட் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்ததால் அவர் சற்று நிதானமாக பேட்டிங் செய்து வந்தார். அப்போது பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு 85 சதவீதமாக இருந்தது. இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு வெறும் 15 சதவீதமாக இருந்தது. பின்னர் 19வது ஒரு விராட் கோலி இரண்டு சிக்ஸர்களை அடித்து போட்டியை தலைகீழாக மாற்றினார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது.
அதேபோல இந்த முறை பும்ரா இந்திய அணியை காப்பாற்றி உள்ளார். இது குறித்து அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். 8 சதவீத வெற்றி என்ற கணினியின் கணிப்புகளை புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கும் ரிஷப் பண்ட், இந்திய அணி வெறும் எட்டு சதவீதம் மட்டுமே வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்து பின்னர் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்பதை சுட்டி காட்டினார்.