நியூயார்க் : இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் 15 வது ஓவரில் பாகிஸ்தான் அணி நிலை குலைந்து போனது. அந்த ஒரே ஓவரில் பும்ராவின் திறமையை பார்த்து அரண்டு போன பாகிஸ்தான் அணி அதன் பின் மீளவே இல்லை.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி மிக மோசமாக பேட்டிங் செய்து 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. முழுமையாக 20 ஓவர்கள் கூட இந்திய பேட்ஸ்மேன்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
அதே சமயம் பிட்ச் பந்து வீச்சுக்கு ஒத்துழைத்ததால் இந்திய அணி சிறிய நம்பிக்கையுடன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பந்து வீச்சை தொடங்கியது. பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் நிலைத்து நின்று ரன் சேர்த்து வந்தார். குறைவான ஸ்கோர் என்பதால் எந்த பதற்றமும் இன்றி பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்தனர். 12 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்து இருந்தது.

அந்த சூழ்நிலையில் எப்படியும் பாகிஸ்தான் அணி தான் வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. அப்போது விக்கெட் தேவை என்ற நிலையில் 15 வது ஓவரை பும்ராவிடம் அளித்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அவருக்கு அப்போது இரண்டு ஓவர்கள் மட்டுமே மீதம் இருந்தன. அந்த இரண்டு ஓவர்களில் அவர் விக்கெட்களை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில், 15 வது ஓவரின் முதல் பந்திலேயே முகமது ரிஸ்வான் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு பவுல்டு அவுட் ஆனார். பும்ராவின் அந்த விக்கெட் போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரில் பாகிஸ்தான் அணி மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு அடுத்த ஓவரில் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் அழுத்தம் காரணமாக ரன் குவிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் வீரர்கள் இமாத் வாசிம் மற்றும் ஷதாப் கான் இரண்டு ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.
அதன் பின் 24 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு சென்றது பாகிஸ்தான். அதன் பின் அந்த அணி அழுத்தம் காரணமாக விக்கெட்களை இழந்து வந்தது. மீண்டும் பும்ரா வீசிய 19வது ஓவரில் அந்த அணியால் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும் அந்த ஓவரில் ஆபத்தான இஃப்திகார் அகமது விக்கெட்டையும் வீழ்த்தினார் பும்ரா.
இதை அடுத்து கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தான் அணியால் 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பும்ரா தான். அவர் இந்த போட்டியில் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதிலும் அவர் வீசிய 15வது ஓவர் தான் போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. பும்ரா தனது சிறப்பான செயல்பாட்டுக்காக ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.