கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சுமார் ஆறு வீரர்கள் கருப்பு ஆடுகளாக அணியை குழியில் தள்ளி வருவதாகவும், அவர்களை டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் அணியில் இருந்து நீக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் நண்பர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே ஷதாப் கான், ஹாரிஸ் ரௌஃப் உள்ளிட்ட அந்த ஆறு வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக மிகப்பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணி கடந்த ஓராண்டாக தொடர்ந்து சொதப்பலாக விளையாடி வருகிறது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, அடுத்து 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை தொடரிலும் மிக மோசமாக செயல்பட்டது.

அந்தத் தொடரிலும் இந்தியா அணிக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. அப்போது பாகிஸ்தான் அணியில் ஃபார்ம் அவுட் வீரர்களை நீக்க வேண்டும் எனவும், பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்தனர். அதன் பின் கேப்டன் பாபர் அசாம் மாற்றப்பட்டு ஷஹீன் ஷா அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அவர் தலைமையில் நியூசிலாந்து டி20 தொடரை பாகிஸ்தான் இழந்ததால் உடனடியாக மீண்டும் பாபர் அசாம் கேப்டன் பதவிக்கு கொண்டு வரப்பட்டார். அப்போதே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பாபர் அசாம் நண்பர்களாக இருக்கும் ஆறு வீரர்களும் அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார்கள் எனவும், அந்த வீரர்களை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என பாபர் அசாம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.
மேலும், பாபர் அசாமை நிர்வகித்து வரும் விளம்பர ஏஜென்சி தான், அந்த ஆறு வீரர்களின் விளம்பரம் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களை நிர்வகித்து வருகிறது. அதனால், அவர்கள் சரியாக விளையாடாத போதும் அணியில் நீடித்திருப்பதை பாபர் அசாம் உறுதி செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குருப் சுற்றில் அமெரிக்கா மற்றும் இந்திய அணிகளிடம் தோல்வி அடைந்துள்ளது. இனி அந்த அணி குரூப் சுற்றில் இரண்டாம் இடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவது சந்தேகம் தான். இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அந்த ஆறு வீரர்களையும் உடனடியாக நீக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மொஹ்சின் நக்வி பேசுகையில், "நாங்கள் முதலில் பாகிஸ்தான் அணியில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனால், இந்திய அணிக்கு எதிராக மிக மோசமாக செயல்பட்டதால் மிகப் பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் செயல்பாடு வெகுவாக சரிந்துள்ளது. இனி அந்த அணியின் செயல்பாட்டை முன்னேற்றுவது எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும்" என்று கூறி இருக்கிறார்.