பிரிட்ஜ்டவுன்: இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற நிலையில் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷமிட்டு வந்த ரசிகர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசி இருக்கிறார். தைரியம் இருந்தால் இப்போது ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக கோஷமிடுங்கள் என அவர்களை பார்த்து கேட்க விரும்புவதாக அவர் கூறினார்.
2024 ஐபிஎல் தொடரின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அது ரோஹித் சர்மா ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் ஆடிய போட்டிகளின் போது ஹர்திக் பாண்டியா எப்போதெல்லாம் களத்தில் சரியாக செயல்படவில்லையோ அப்போதெல்லாம் ரசிகர்கள் கோஷம் எழுப்பி அவரை அழுத்தத்துக்கு உள்ளாக்கி வந்தனர்.

அந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவால் சரியாக செயல்பட முடியவில்லை. அவரது பேட்டிங், பவுலிங் மற்றும் கேப்டன்சி என அனைத்துமே சராசரியாகவே இருந்தது. ரசிகர்களின் எதிர்ப்பால் ஹர்திக் பாண்டியா மனம் துவண்டு போயிருந்தார். இந்த சூழ்நிலையில் தான் அவர் இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதற்கும் கூட சில ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டார். ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் பகுதி நேர வேகப்பந்துவீச்சாளராக எப்போதெல்லாம் கேப்டன் பந்து வீச வாய்ப்பு அளிக்கிறாரோ அப்போதெல்லாம் விக்கெட் வீழ்த்தினார். பேட்டிங்கில் கடைசி ஓவர்களில் இறங்கி அதிரடியாக ஆடி அவர் அணிக்கு கை கொடுத்தார்.
மேலும், இந்த உலகக் கோப்பையில் அதிக மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டதன் காரணமாகவே இந்த நிலையை அடைந்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா. இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்கா. அப்போது பந்து வீசிய ஹர்திக் பாண்டியா முதல் பந்திலேயே ஆபத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவரான டேவிட் மில்லர் விக்கெட்டை வீழ்த்தினார்.
அடுத்து அந்த ஓவரில் எட்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதை அடுத்து இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை அடுத்து பேசிய அம்பத்தி ராயுடு, ஹர்திக் பாண்டியா இப்போது இந்திய அணிக்கு வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். அவரைப் பார்த்து கோஷம் எழுப்பிய ரசிகர்களை இப்போது அதை செய்வார்களா? என கேட்க விரும்புகிறேன் என சவால் விட்டார்.