IND vs SA: உலகக்கோப்பை நாயகனே இவர்தான்.. வெளிவராத தகவல்.. மிரள வைக்கும் ஹர்திக் பாண்டியா STATS
பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டாவது முறையாக இந்திய அணி டி20 உலக கோப்பை வென்றது. இந்தப் போட்டியின் முடிவில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனாக விராட் கோலி மற்றும் பும்ரா அறிவிக்கப்பட்டனர். ஆனால், இவர்களைத் தாண்டி ஒரு இந்திய வீரர் இந்த உலகக்கோப்பையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய வீரராக இருக்கிறார். அது குறித்த புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.
இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலி 76 ரன்கள் அடித்தார். அதனால் அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதேபோல இந்த தொடரில் குறைந்த ரன்கள் விட்டுக் கொடுத்து, 15 விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இவர்கள் இருவர் தான் உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்கள் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், வேறு ஒரு புள்ளி விவரம் இவர்கள் இருவரையும் தாண்டி மற்றொரு இந்திய வீரர் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முதல் காரணம் என குறிப்பிடுகிறது. எம் வி பி (MVP) எனப்படும் அதிக மதிப்புமிக்க வீரர் என்ற புள்ளிவிவரத்தில் ஒரு வீரரின் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து செயல்பாடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் புள்ளிகள் வழங்கப்படும்.
அந்த புள்ளி விவரத்தின்படி பார்க்கும்போது ஹர்திக் பாண்டியா இந்த தொடரிலேயே அதிக மதிப்புமிக்க வீரராக இருக்கிறார். அவருக்கு 410.2 இம்பேக்ட் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் 8 போட்டிகளில் 144 ரன்கள் மற்றும் 11 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதே பட்டியலில் அடுத்த இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருக்கிறார். அவர் 408.9 புள்ளிகளை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா (398.8 புள்ளிகள்), நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மார்க்கஸ் ஸ்டோனிஸ் (395.5) 5வது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (366.4) உள்ளனர்.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்த உலகக்கோப்பையின் நாயகன் ஹர்திக் பாண்டியா தான். அவர் ஆல்ரவுண்டராக பெருமளவில் இந்திய அணிக்கு கை கொடுத்திருக்கிறார். அவருக்கு இணையாக பும்ரா பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அதேபோல பேட்டிங்கில் ரோஹித் சர்மா இரண்டு அரை சதங்கள் அடித்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடர் தொடரில் ஹர்திக் பாண்டியா சரியாக செயல்படாததால் அவரை உலகக்கோப்பை அணியிலேயே சேர்க்கக்கூடாது என பலரும் கூறி வந்த நிலையில். அவர் இந்த உலகக் கோப்பையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய வீரராக சிறப்பாக செயல்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications