பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். பார்படாஸ் மைதானத்தின் பிட்சில் புற்கள் இல்லாததால், பேட்டிங் செய்வதற்கு உதவியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2010ஆம் முதல் டாஸ் வென்ற அணியே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதனால் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற பின் ரோகித் சர்மா பேசுகையில், நாங்கள் முதல் பேட்டிங் செய்யப் போகிறோம். இந்த பிட்ச் பார்க்க நன்றாக உள்ளது. நாங்கள் ஏற்கனவே இதே மைதானத்தில் ஒரு போட்டியில் விளையாடி இருக்கிறோம்.

அதனால் நல்ல ஸ்கோரை எட்ட முடியும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வீரருக்கும் கொடுத்த ரோலை புரிந்து கொள்வதால், நன்றாக விளையாட முடிகிறது. இந்த தருணம் மிகப்பெரியது என்றாலும், அழுத்தத்தை சமாளிக்க வேண்டும். மற்றொரு சர்வதேச போட்டியாகவே கருத வேண்டும். இந்த டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறது. அதனால் 2 தரமான அணிகளுக்கு இடையிலான ஆட்டமாக இருக்கும். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மார்க்ரம் பேசுகையில், நாங்களும் பேட்டிங் செய்யவே விரும்பி இருப்போம். இந்த பிட்ச் கொஞ்சம் ட்ரையாக உள்ளது. அதனால் முதல் விக்கெட்டை விரைவாக வீழ்த்துவோம் என்று நம்புகிறேன். இந்த டி20 உலகக்கோப்பையில் சில நேரங்களில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றாலும், வெற்றிபெற்றிருக்கிறோம். எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. இதுவரை நாங்கள் இறுதிப்போட்டிக்கே வந்ததில்லை. நாங்களும் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் : ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், பும்ரா
தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன் : டி காக், ஹென்ரிக்ஸ், மார்க்ரம், ஸ்டப்ஸ், கிளாசன், டேவிட் மில்லர், யான்சன், மஹாராஜ், ரபாடா, நார்கியே, ஷம்சி