பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்க அணி ஆக்ரோஷமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த அணியை கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்திய அணியில் யாருக்கு உள்ளது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா என இரண்டு அணிகளுமே இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை. குரூப் சுற்றில் தென்னாப்பிரிக்க அணி தான் ஆடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அடுத்து சூப்பர் 8 சுற்றிலும் தான் ஆடிய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. அரை இறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. அடுத்து இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோத உள்ளது.

இதுவரை தென்னாப்பிரிக்கா அணி ஒருமுறை கூட உலகக் கோப்பை வென்றதில்லை. எந்த ஒரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் அந்த அணி விளையாடியதும் இல்லை. அதனால், தென்னாப்பிரிக்கா அணி மிகப்பெரிய வேட்கையுடன் உள்ளது. இந்திய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி ஆக்ரோஷமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா அணியின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரே இந்திய பந்துவீச்சாளர் பும்ரா மட்டுமே. உலகின் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக விளங்கும் பும்ரா இந்த உலகக் கோப்பையில் சில போட்டிகளில் நான்கு ஓவர்களில் 10 ரன்களுக்கும் குறைவாக விட்டுக் கொடுத்து இருக்கிறார். இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் மற்ற வேகப் பந்துவீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறார்கள்.

அவர்கள் விக்கெட்களை வீழ்த்தினாலும் ரன்களை விட்டுக் கொடுத்து வருவது சற்று பின்னடைவாக உள்ளது. அந்த வகையில் பும்ரா மட்டுமே ரன்களை விட்டுக் கொடுக்காமல் விக்கெட் வீழ்த்தி வருகிறார். இன்று இறுதிப் போட்டி நடைபெற உள்ள பிரிட்ஜ் டவுன் மைதானம் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த போட்டியில் பும்ரா ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.
பந்துவீச்சில் இந்திய அணியின் ஆயுதமே பும்ரா தான் என்ற நிலை உள்ளது. ஒருவேளை இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கில் அதிக ரன்கள் குவித்து போட்டி அணியின் பக்கம் இருந்தால், ஒரே ஒரு ஓவரில் போட்டியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்றால் அது பும்ரா மட்டுமே. அது போன்ற சமயத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, அவரைத் தான் பந்து வீச அழைப்பார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் பும்ரா வீசிய 15வது ஓவர் போட்டியை தலைகீழாக மாற்றியது. அதே போல இந்த இறுதிப்போட்டியிலும் இக்கட்டான நேரங்களில் பும்ரா இந்திய அணியை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.