IND vs SA: இந்தியாவை வீழ்த்த 6' 9 அடி பவுலரை இறக்கும் தென்னாப்பிரிக்கா.. மாஸ்டர்பிளான் இதுதான்
பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்த தென்னாப்பிரிக்கா 6 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட வேகப் பந்துவீச்சாளரை வைத்து திட்டம் தீட்டி உள்ளது. பவர் பிளே ஓவர்களில் அவரது பந்து வீச்சில் இந்திய அணி விக்கெட்களை இழக்காமல் இருக்க வேண்டும். குறிப்பாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை வீழ்த்தவே அவரை தென்னாப்பிரிக்கா பயன்படுத்த உள்ளது.
இந்த இறுதிப் போட்டி பார்படோஸ் நாட்டில் உள்ள பிரிட்ஜ் டவுன் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த மைதானம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் என கருதப்படுகிறது. இந்த உலக கோப்பையில் பிரிட்ஜ் டவுன் மைதானத்தில் நடந்த எட்டு போட்டிகளில் வேகப் பந்துவீச்சாளர்கள் 59 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்கா அணியில் காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ஜே மற்றும் மார்கோ ஜான்சன் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெறுவார்கள். இதில் காகிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நோர்ஜே ஆகிய இருவருக்கு எதிராக இந்திய வீரர்கள் கடந்த காலங்களில் ரன் குவித்து உள்ளனர். ஆனால், மார்கோ ஜான்சன் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் சிக்கலாகவே இருந்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் அவர் 6 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர் என்பதோடு, அவர் இடது கை வேகப் பந்துவீச்சாளர் என்பதும் இந்திய அணிக்கு சிக்கலான ஒன்றாக உள்ளது.
அவர் இந்திய அணியின் வலது கை பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அவரது பந்துவீச்சில் சில போட்டிகளில் தடுமாறி உள்ளனர். அவர் நான்கு முறை ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக வலது கை பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருக்கும் நிலையில், அவர்களை வீழ்த்த மார்கோ ஜான்சன் பவர் பிளே ஓவர்களில் பந்து வீசுவார்.
அவர் பவர் பிளேவில் மட்டும் இரண்டு முதல் மூன்று ஓவர்கள் வரை பந்து வீச வாய்ப்பு உள்ளது. அவரது ஓவர்களில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விக்கெட் இழக்காமல் இருக்க வேண்டும். அதேபோல, அவர் போட்டியின் கடைசி நேரத்திலும் பந்து வீசுவார். அப்போது களத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா விக்கெட்களை இழக்காமல் ரன் குவிக்க வேண்டும். இதுவே இந்திய அணிக்கு சவாலான விஷயமாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications