பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முன்னேறி உள்ளன. இந்த இரண்டு அணிகளும் உலகக்கோப்பை வெல்வதற்கான வேட்கையுடன் உள்ளன. இந்திய அணி கடந்த 2013ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்றிருந்தது. அதன் பின்பு இதுவரை உலகக் கோப்பைகளில் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறினாலும் உலகக் கோப்பையை வெல்லவில்லை.
மறுபுறம் தென்னாப்பிரிக்கா அதன் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கோப்பையின் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்த சூழ்நிலையில் அதிக உலக கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்கு உரிய ரிக்கி பாண்டிங், தென்னாப்பிரிக்கா அணிக்கு முக்கிய அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். அது இந்திய அணிக்கும் பொருந்தும்.

"பல அணிகளும் இறுதிப் போட்டியை, "இதுவும் மற்றொரு போட்டி தான்" என சாதாரணமாக கையாள நினைக்கிறார்கள். அந்த சூழ்நிலையின் முக்கியத்துவத்தின் பின் ஓடி ஒளிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால், அது உதவி செய்யாது. உலகக்கோப்பை என்பது முக்கியமான போட்டி என்பதை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு அதற்காக விளையாட வேண்டும்" என்றார் ரிக்கி பாண்டிங்.
அதாவது உலக கோப்பை இறுதிப்போட்டி போன்ற முக்கியமான ஒரு போட்டியில் ஆட வேண்டும் என்று நினைத்தால் கடும் அழுத்தம் உண்டாகும் என்பதால் பல அணிகளும் இது மற்றும் ஒரு போட்டி என்ற மனநிலையை உருவாக்கி விளையாட முயற்சிப்பார்கள். அதன் மூலம் அந்த அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என நினைப்பார்கள். ஆனால், அது உதவி செய்யாது. மாறாக நாம் உலகக்கோப்பைக்காக ஆட வேண்டும். அதை வெல்வதற்காக ஆட வேண்டும் என நினைத்து முழு முயற்சியோடு விளையாட வேண்டும் என ரிக்கி பாண்டிங் அறிவுரை கூறியிருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா முதல் முறையாக உலகக் கோப்பை இறுதி போட்டியில் விளையாடும் நிலையில் அந்த அணிக்கு சில அறிவுரைகளை கூறினார் ரிக்கி பாண்டிங். "இந்த வீரர்கள் இதற்கு முன் இதுபோன்ற இறுதிப் போட்டியில் விளையாடியது இல்லை. எனவே, இன்றும், நாளையும் நல்ல மனநிலையில் இருங்கள். அதே சமயம் உங்களுடைய இறுதிப் போட்டிக்கான தயாரிப்புகளில் நிலையாக இருங்கள். இந்த உலகக் கோப்பையில் இதுவரை தென்னாப்பிரிக்கா எந்த போட்டியிலும் தோல்வி அடையவில்லை. எனவே, எதையும் மாற்ற வேண்டும் என நினைக்காதீர்கள். எதையும் அதிகப்படியாக முயற்சிக்க வேண்டும் என நினைக்காதீர்கள். இறுதிப் போட்டிக்கு இதற்கு முன் இருந்த அதே மனநிலைக்கு வாருங்கள். உங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வாருங்கள். ஒரு அணியாகவும் சிறந்த ஆட்டத்தை ஆடுங்கள். இதை செய்தால் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்துவது கடினமாகவே இருக்கும்." என்றார் ரிக்கி பாண்டிங்.