பிரிட்ஜ்டவுன்: இந்திய அணியின் ஜாம்பவான்கள் ஆன விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒரே நேரத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அதுவும் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பின் இருவரும் ஒன்றாக இந்த முடிவை அறிவித்து இருக்கின்றனர். இதுவரை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி பேசி வருவார்கள். ஆனால், இப்போது அந்த இரண்டு ஜாம்பவான்களும் ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்து அவர்களை உறைய வைத்துள்ளனர்.
இருவரும் இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த மன நிறைவோடு இளம் வீரர்களுக்கு வழிவிட்டு டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 அணியில் இருந்து விலகுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படி இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வு முடிவை அறிவிப்பார்கள் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

இதை அடுத்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர். இந்திய அணி உலகக் கோப்பை வென்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், இனி உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களாக இத்தனை ஆண்டு காலம் கோலோச்சிய ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இனி சர்வதேச டி20 போட்டிகளில் ஆட மாட்டார்கள் என்பதை எண்ணி சோகத்தில் உள்ளனர் ரசிகர்கள்.
தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் இடத்திலும், விராட் கோலி இரண்டாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்ததற்கு இதுவே சிறந்த உதாரணம். 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால் பெரும் சோகத்தில் இருந்த கோலி, ரோஹித், ஓராண்டுக்கு பின் இந்திய டி20 அணிக்கு திரும்பியதோடு உலக கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார். இனி இவர்கள் விட்டுச் சென்ற பாதையில் இளம் வீரர்கள் இந்திய டி20 அணியை வழிநடத்திச் செல்ல வேண்டும்.